Featuredதமிழீழம்

தலைவரின் பெயரை தனது துப்பாக்கியால் எழுதிய ஒரு வீரனின் கதை..

மாத்தளன், வலைஞர்மடம், பொக்கணை, முள்ளிவாய்க்கால் பகுதிக்கு புதுக்குடியிருப்பு மற்றும் வட்டுவாகல் பகுதிகளால் மட்டுமே தரைப்பாதையிருந்தது. பச்சைப்புல்மோட்டை பகுதியால் ஆழம்குறைந்த பாதையொன்றிருந்தது. ஆனந்தபுரம் BOX சமயத்தில் வாகனங்கள் செல்லக்கூடிய பாதையொன்றிருந்தது. (அதன்பின்னர் பெருமழை பொழிய, அந்தப்பாதை நீரால் மூடப்பட்டுவிட்டது)

முள்ளிவாய்க்காலை நோக்கி பின்வாங்குவதென புலிகள் தீர்மானித்ததைவிட, அந்த இடத்தில் புலிகளை முடக்குவதென இராணுவம் தீர்மானித்தது என்பதுதான் சரி. அதற்கு இரண்டு காரணம். முதலாவது, அது பரந்த வெட்டைவெளியான பிரதேசம். புலிகளால் நீண்டகாலம் அங்கு தாக்கு பிடிக்க முடியாது. பயிர்களும் விளையாது. உணவு உற்பத்திக்கும் வாய்ப்பில்லை.

இரண்டாவது- முல்லைத்தீவு வரைபடத்திலேயே காடுகளிலிருந்து தொலைவில் உள்ள இடம் அது மட்டும்தான். புலிகளை காடுகளிற்கு அருகில் முடக்க முயன்றால், திட்டத்தில் கொஞ்சம் பிசகி புலிகள் காட்டுக்குள் நுழைந்தால்- பரோட்ட சூரி மாதிரி கோட்டை அழித்துவிட்டு, மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பிக்க வேண்டுமென்பது பாதுகாப்பு தரப்பிற்கு தெரிந்திருந்தது.

புலிகள் மீண்டும் காட்டுக்குள் நுழைய அனுமதிக்காமல் இருப்பதெனில், காட்டைவிட்டு வெகுதொலைவில் அவர்களை முடக்க வேண்டும். முல்லைத்தீவில் அப்படியான இடம்- முள்ளிவாய்க்கால்தான்.

புதுக்குடியிருப்புத்தான் புலிகளின் கடைசி கேந்திர நிலையம். புதுக்குடியிருப்பை கைவிடுவது, அரசியல்- இராணுவ அர்த்தங்கள் அனைத்திலுமே புலிகளிற்கு பாதகமானது. தொடர்ந்தும் பின்நகர்ந்து கொண்டிருக்க முடியாது என்ற முடிவிற்கு பிரபாகரன் வந்திருந்தார். புதுக்குடியிருப்பின் பின்பகுதியில்- ஆனந்தபுரத்தில்தான் அவரது முகாம் அமைந்திருந்தது. அந்த முகாமில் இருந்து இனிமேல் பின்நகரவே மாட்டேன் என்ற முடிவிற்கு பிரபாகரன் வந்திருந்தார்.

இந்த முடிவை அவர் ஏன் எடுத்தார், அந்த நாட்களில் என்ன நடந்தது, அந்த முடிவை யார் மாற்ற வைத்தார்கள், அதன் விளைவுகள் என்ன போன்ற விசயங்களை இந்த பகுதியில் நாம் குறிப்பிடவில்லை. அது இறுதியுத்தத்தில் நடந்தது என்ன பகுதியில் இடம்பெறும். அதுவரை வாசகர்கள் பொறுத்துக்கொள்ள வேண்டும்.

புலிகள் ஆனந்தபுரத்தில் நிலைகொண்டபோது, ஆனந்தபுரத்திற்கும் வலைஞர்மடத்திற்குமிடையில் ஒரு தரைப்பாதையிருந்தது. நந்திக்கடலில் நீர்வற்றியிருந்ததால் வாகனப் போக்குவரத்து செய்யக்கூடியதாக இருந்தது. ஆனந்தபுரம் முழுமையாக இராணுவத்தால் கைப்பற்றப்பட்ட பின்னர், அடுத்தடுத்த நாட்களில் முல்லைத்தீவில் பெருமழை கொட்டி, அந்த நீரேரி நிரம்பிவிட்டது. அடைமழையால் இடம்பெயர்ந்து தகரக்கொட்டகைக்குள் இருந்த மக்கள் பெரும் சிரமப்பட்டாலும், இராணுவ ரீதியான ஒரு சாகத்தை புலிகளிற்கு கொடுத்தது. நீரேரி தண்ணீரால் நிரம்பியதால், இராணுவத்திற்கு தரைவழி நகர்வு செய்ய சிரமமானது.  எனினும், இந்த சாதகத்தையும் புலிகளால் பயன்படுத்த முடியாமல் போய்விட்டது. இத்துடன், ஆனந்தபுரம் தொடர்பான விசயங்களை முடித்துக்கொண்டு, கடாபியின் இறுதிக்கணங்கள் பற்றி குறிப்பிடுகிறோம்.

ஆனந்தபுரம் மீது 2009 மார்ச் 31ம் திகதி நள்ளிரவு இராணுவம் முற்றுகையை ஆரம்பித்தது. அதன்பின்னர் அங்கு எப்படியான போர் நிலவியது என்பதை ஏற்கனவே குறிப்பிட்டிருந்தோம். இலங்கையில் குறிப்பிட்ட ஒரு நிலப்பரப்பில் அதிக வெடிபொருள்கள் வீசப்பட்ட களமாக அதுதான் இருக்கும். அங்கு போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளும் போராளிகளிற்கு இருக்கவில்லை. ஆனந்தபுரம் முற்றுகைக்குள்ளான பின்னர் போதிய உணவுப்பொருள் இல்லை. அங்கு நின்றவர்களில் கணிசமானவர்கள் புதிய போராளிகள். அவர்களால் அந்த கொடூர தாக்குதலை எதிர்கொள்ள முடியவில்லை.

புலிகளின் ராங்கி ஒன்றும் அங்கு நின்றது. துரதிஸ்டவசமாக முன்னரண் மண்அணையில் அது புதைந்தும் விட்டது. அதை எடுக்கும் வாய்ப்பும் புலிகளிற்கு இருக்கவில்லை.

குறுகிய நிலப்பரப்பில், போதிய பாதுகாப்பு ஏற்பாடு இல்லாத நிலையில், புலிகள் மீது நடத்தப்பட்ட அகோர தாக்குதலில், புலிகளின் அணிகள் நிலைகுலைந்து விட்டன. ஒன்றிணைந்து திட்டமிட்டு எதையும் செய்யும் நிலைமை அவர்களிற்கு இல்லாமல் போனது. அதேநேரம் தொடர்ந்தும் ஆனந்தபுரத்திற்குள் நிலைகொள்ள முடியாத அதீத உக்கிர தாக்குதல் அவர்கள் மீது நடத்தப்பட்டுக் கொண்டிருந்தது. இப்பொழுது ஆனந்தபுரத்தில் இருந்த அணிகளிற்கு இரண்டேயிரண்டு தெரிவுகள்தான் இருந்தன. ஒன்று- ஆனந்தபுரத்தைவிட்டு வெளியேறுவது. இரண்டு- அங்கேயே மரணமடைவது.

ஆனந்தபுரத்தை இனி தக்கவைக்கவே முடியாதென்ற நிலைமையேற்றபட்டபோது, முற்றுகையை உடைக்க சில முயற்சிகள் செய்து பார்த்தார்கள். முடியவில்லை.

புலிகள் இன்னொரு உத்தியை பாவித்து பார்த்தார்கள். முற்றுகையை உடைத்து ஆனந்தபுரத்தில் சிக்கிய அணிகளை மீட்க பிரதான நிலப்பரப்பில் இருந்த அணிகள் முயன்றன. இரட்டை வாய்க்கால் பகுதியால் புலிகள் ஒரு உடைப்பு தாக்குதலை மேற்கொண்டனர். அந்த பகுதியால் இராணுவத்தின் முற்றுகையை உடைத்தால், ஆனந்தபுர முற்றுகையில் இருந்த போராளிகளை வெளியில் எடுக்கலாம் என நினைத்தார்கள். மந்துவில், இப்போதைய இராணுவத்தின் போர் நினைவுச்சின்னம் உள்ள பகுதிக்கு அப்பாலான பகுதியில் அந்த தாக்குதலை மேற்கொண்டனர்.

புலிகளின் இந்த தாக்குதலும் வெற்றியளிக்கவில்லை.

இதன்பின்னர், ஆனந்தபுரத்திற்குள் சிக்கிய தளபதிகள் தமக்கிடையில் தொலைத்தொடர்பு கருவியில் பேசி, அவரவர் நிற்கும் பகுதியால் உடைப்பை மேற்கொண்டு தப்பிக்க வசதியானவர்கள் தப்பிக்கலாமென்ற முடிவையெடுத்தனர்.

இதுதான் புலிகளிற்கு பெரும் அழிவை கொடுத்தது.

ஏனெனில், ஆனந்தபுரம் முற்றுகை ஆரம்பிக்கும்போது, எல்லா தளபதிகளும் கிட்டத்தட்ட சமனான ஆளணி, ஆயுத வளங்களை வைத்திருந்தனர். ஆனால் மூன்றுநாள் அகோர யுத்தத்தில் பலர் மரணமானார்கள். இப்பொழுது எல்லோரிடமும் சமமானளவு ஆள், ஆயுத பலமிருக்கவில்லை. ஆனால், ஒன்றிணைந்து தாக்குதல் நடத்தும் வாய்ப்பும் இல்லை. அதனால் அவரவர் நிலைகொண்டிருந்த பகுதிக்குள்ளால் தாக்குதல் நடத்த முடிவெடுத்தார்கள்.

இந்த தாக்குதல் நடத்தப்பட்டபோது, கடாபி நடக்க முடியாத நிலைமையில் இருந்தார். அவரை இரண்டு போராளிகள் தோளில் காவிக்கொண்டு வெளியேறுவதாக இருந்தது.

கடாபி தங்கியிருந்த பகுதி மந்துவில் குளத்திற்கு அண்மையாக இருந்த இடம். இந்த முனையில் தாக்குதல் நடத்திய புலிகள், இராணுவத்தின் முன்னரணை உடைத்துவிட்டனர்!

புலிகளின் ராங்கி

கடாபி தங்க வைக்கப்பட்டிருந்த பகுதியில் இராணுவத்தின் முன்னரண் உடைக்கப்பட்டது எவ்வளவு உண்மையோ, அதேயளவு உண்மை- அந்த உடைப்பிற்குள்ளால் கடாபி வெளியே வரவில்லையென்பது!

ஏன் வரவில்லை?…….

Comment here