Featuredஇலங்கைசெய்திகள்

தமிழர்கள் தலையில் அடக்கு முறையைக் கையாண்ட சிங்களம்.

தமிழர்கள் மீது அடக்குமுறையை அவிழ்த்துவிட்டால் ஆட்டம் காண்பது தமிழர்கள் என்பதனை இந்த சிங்களம் எப்பொழுது உணருமோ?

மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி, செல்வாரி கிராமத்தில் அமைக்கப்பட்ட பனை அபிவிருத்திச் சபையின் ‘பனந்தும்பு உற்பத்தி நிலையம்’ திறந்து வைக்கப்பட்ட நிலையில், தமிழ் மொழிக்கு முதலிடம் கொடுக்கப்பட்டதை அவதானித்த அமைச்சர் விமல் வீரவன்ச குறித்த பெயர் பலகையை இன்றைய தினம் திங்கட்கிழமை மாலை மாற்றியமைத்துள்ளார்.

அதை பெருமிதத்துடன் தனது முகப்புத்தகத்திலும் பகிர்ந்து இனவாதிகளை மகிழ்ச்சிப்படுத்தியுள்ளார்.

மன்னாரிற்கு கடந்த சனிக்கிழமை (18) விஜயம் மேற்கொண்டிருந்த அமைச்சர் விமல் வீரவன்ச இரண்டு நிகழ்வுகளில் கலந்து கொண்டிருந்தார்.

அன்றைய தினம் காலை 10 மணியளவில் மன்னார் பெரிய கடை பகுதியில் அமைந்துள்ள மாந்தை உப்பு உற்பத்தி நிலையத்திற்கு (மாந்தை சோல்ட் லிமிற்றெற்) திடீர் விஜயம் செய்திருந்தார்.

அங்கு சென்ற அமைச்சர் உப்பு உற்பத்தி நிலையத்தை பார்வையிட்டதோடு, அங்குள்ளவர்களுடன் கலந்துரையாடினார்.

அதனைத் தொடர்ந்து மன்னார்- தலைமன்னார் பிரதான வீதி, செல்வாரி கிராமத்தில் அமைக்கப்பட்ட பனை அபிவிருத்திச் சபையின் ‘பனந்தும்பு உற்பத்தி நிலையம்’ திறந்து வைக்கப்பட்டது.

குறித்த நிலையத்தை அமைச்சர் விமல் வீரவன்ச வைபவ ரீதியாக திறந்து வத்தார்.

-அந்த நிலையத்தின் பெயர்ப் பலகையில் தமிழில் முதலிலும், இரண்டாவது சிங்களத்திலும், மூன்றாவது ஆங்கிலத்திலும் எழுதப்பட்டிருந்தது.

அந்தப் பெயர்ப்பலகையில் தமிழுக்கு கொடுக்கப்பட்டிருந்த முன்னுரிமையை அவதானித்த அமைச்சர் விமல் வீரவன்ச, முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க, ஆவேசத்துடன் திறக்கப்பட்ட அந்த பெயர் பலகையை கழற்றி விட்டு உடனடியாக சிங்களத்தில் முதலாவதும், தமிழில் அடுத்ததாகவும் வரும் வகையில் மாற்றும் படி உரிய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதற்கமைவாக உரிய அதிகாரிகள் அமைதியான முறையில் மாற்றத்தை மேற்கொண்டுள்ளனர்.

இந்த நிலையில் நேற்று திங்கட்கிழமை(20) மாலை குறித்த பெயர்ப்பலகை மாற்றப்பட்டு உரிய இடத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு மாற்றப்பட்டதை மகிழ்ச்சியுடன் அமைச்சர் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மாற்றப்பட்ட புகைப்படத்தையும் ஆதாரத்துக்கு வெளியிட்டிருக்கிறார்.

இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை மன்னாரில் திறந்து வைத்த குறித்த பெயர்ப் பலகையில் இருந்த குறையை அந்த நேரத்திலேயே அதன் தலைவருக்கு நான் ஆணையிட்டதைத் தொடர்ந்து அது சரி செய்யப்பட்டிருக்கிறது என்று முகநூலில் பதிவிட்டுள்ளார்.

ஏற்கெனவே விமல் வீரவன்ச கடந்த ஆண்டு யாழ் விமான நிலையம் தொடங்கப்பட்ட போது அங்கே பெயர்ப்பலகையில் தமிழில் முதலாவதாக எழுதியிருந்ததை கடுமையாக விமர்சித்து கூட்டங்களில் பேசியுள்ளமை குறிப்பிடத்தக்கது. புதிய அரசின் சுதந்திரதின நிகழ்வில் தமிழில் தேசிய கீதம் இசைக்கப்படுவதிலும் சர்ச்சை நீடித்து வரும் நிலையில், புதிய அரசின் அடுத்தடுத்த நடவடிக்கைகள் சிறுபான்மையினரை மேலும் மேலும் அச்சமூட்டும் வகையில் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comment here