Featuredதமிழீழம்

கனடாவிலிருந்து வந்த கோடிக்கணக்கான பணம் எங்கே?

இலங்கை தமிழ் அரசுக் கட்சிக்கு தேர்தல் காலத்தில் வழங்கப்படும் நிதி தொடர்பாக மத்திய செயற்குழு கூட்டத்தில் பெரும் களேபரம் ஏற்பட்டுள்ளது.

இதன் உச்சக்கட்டமாக, கட்சித் தலைவர் மாவை சேனாதிராசா, தனது மகன் கலையமுதனை நோக்கி, “உன்னை வெளியாலே கலைப்பேன்“ என எச்சரித்த சுவாரஸ்ய சம்பவமும் இடம்பெற்றதை தமிழ்பக்கம் நம்பகரமாக அறிந்தது.

இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் நேற்று (23) இந்த சம்பவம் நடந்தது.

அந்த சம்பவத்தை குறிப்பிட முன்னர் ஒரு பின்னணி தகவல்-

கனடாவிலுள்ள சில நபர்கள் பணத்தை வீசியெறிந்து, இலங்கையில் கூலிப்படை அரசியல் செய்ய முனைவது தொடர்பாக தமிழ்பக்கத்தில் ஏற்கனவே பலமுறை சுட்டிக்காட்டியிருந்தோம்.

பல புலம்பெயர் அமைப்புக்கள், பணத்தை வீசியெறிந்து பல குழுக்களை இயக்குவதை போல, கனடாவிலுள்ள சிறிய குழுவொன்றும், தமிழ் அரசுக்கட்சியின் ஒரு சிறிய குழுவிற்கு பணத்தை வீசியெறிந்து இயக்கி வருவதைப் பற்றிய பல தகவல்களை தமிழ்பக்கம் பலமுறை சுட்டிக்காட்டியிருந்தது.

அந்த குழுவின் அனுசரணையிலேயே வடமாகாணசபையில் குழப்பங்கள் ஏற்படுத்தப்பட்டு, விக்னேஸ்வரனிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரப்பட்டது. அஸ்மின், சயந்தன், ஆர்னோல்ட், சத்தியலிங்கம், சாணக்கியன் ஆகியோரை அந்த குழு போஷித்து, பலப்படுத்த முயற்சித்து வருகிறது.

தேர்தல் காலத்தில் இந்த குழு கனடாவில் பணம் சேகரித்து, சுளையாக அனுப்புவது வழக்கம்.

அந்த குழுவின் கனடா செயற்பாட்டாளராக இருந்த குகதாசன் என்பவர், இறக்குமதியாகி தற்போது திருகோணமலை நாடாளுமன்ற தேர்தலில் களமிறங்கவுள்ளார். பணம் பாதாளம் வரை பாயுமென்ற நம்பிக்கையில், திருகோணமலையில் பழைய கட்சி செயற்பாட்டாளர்களையெல்லாம் தூக்கி வீசிவிட்டு, தனித்தவில் வாசிக்க முயன்று தற்போது சிக்கிப் போயுள்ளார். அவருக்கும், திருகோணமைலையில் கட்சி செயற்பாட்டாளர்களிற்குமிடையில் இணக்கப்பாட்டை ஏற்படுத்தும் சந்திப்பு இன்று, சம்பந்தன் தலைமையில் நடக்கவுள்ளது.

அவர் அண்மையில் தானே கேள்வியெழுப்பி, தானே விடையளித்து, ஒரு கேள்வி பதில் அறிக்கையை பத்திரிகைகளில் வெளியிட்டிருந்தார். அதில், “நான் சில கோடி ரூபாயை கட்சிக்காக வழங்கியிருக்கிறேன்“ என குறிப்பிட்டுமிருந்தார்.

இந்த அறிக்கையை படித்த கட்சியின் நிர்வாகிககள், அப்படி சில கோடி ரூபாக்கள் அவரால் கட்சிக்கு வழங்கப்பட்டதா என வினவியுள்ளனர். இந்த விவகாரம் கட்சியின் பொருளாளர் வரை போனது. குகதாசனிடமிருந்து ஒரு தசமும் கட்சியின் பொருளாளரிடம் வரவில்லை. பொருளாளரிற்கு வராமல், கட்சிக்கு பணம் வர சாத்தியமில்லையே?

இதையடுத்து, கட்சியின் செயலாளர் மற்றும் பல பிரமுகர்களிற்கு பொருளாளர் தரப்பிலிருந்து இந்த விடயத்தை சுட்டிக்காட்டி கடிதம் அனுப்பப்பட்டிருந்தது. கட்சி செயலாளரும் கனடா குறூப் ஆள்த்தான். கடிதத்தை பார்த்து விட்டு அவரும் கப்சிப்பாக இருந்து விட்டார்.

இதையடுத்தே, இந்த விவகாரம் நேற்று கட்சியின் மத்திய செயற்குழுவில் எழுப்பப்பட்டது.

கட்சியின் பொருளாளர் கனகசபாபதி, இந்த அறிக்கையை சுட்டிக்காட்டி, அப்படி கட்சிக்கு பணம் வழங்கினீர்களா? யாரிடம் வழங்கினீர்கள்? என கேட்டார்.

நான் பணம் வழங்கினேன் என சுயதம்பட்டம் அடித்தே தேர்தலில் வெற்றிபெறலாமென நினைத்தோ என்னவோ குகதாசன் சொன்னது இப்படி மாறுமென அவர் எதிர்பார்க்கவில்லை. விக்கித்துப் போனார்.

கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் திண்டாட, சுமந்திரன் அவருக்கு ஆதரவாக களமிறங்கி, அந்தப் பணத்தை நான்தான் வாங்கினேன் என்றார்.

அப்படியென்றால், அந்த பணம் எங்கே, அதற்காக கணக்கு என்ன? என கூட்டத்திலிருந்த பலரும் கேள்வியெழுப்பினர்.

கட்சியின் பொருளாளர் இருக்க, தனிநபர்கள் ஊடாக இப்படியான பணக்கொடுக்கல் வாங்கலின் தேவை என்ன? இதன் நேர்மைத்தன்மையை எப்படி ஏற்றுக்கொள்வது என கேள்வியெழுப்பினார்.

கனடிய தமிழ் காங்கிரஸ் வழங்கிய பணத்தை, தான் வழங்கியதாக குகதாசன் பாவனை பண்ணுகிறார், பகிரங்க அறிக்கை விடுகிறார், அவர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுங்கள் என்றும் வலியுறுத்தினர்.

முறையற்ற நிதி பரிமாற்றத்திற்கு மாவை சேனாதிராசாவின் மகன் கலையமுதன் கடும் எதிர்ப்பை தெரிவித்து, அனைத்தும் முறைப்படி, கணக்கு நடவடிக்கைக்கு ஊடாக நடைபெற வேண்டுமென வலியுறுத்தினார். இதன்போது, எம்.ஏ.சுமந்திரனுக்கும் அவருக்கும் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது.

அது நாங்கள் கனடாவில் திரட்டிய பணம் என சுமந்திரன் குறிப்பிட்டார்.

தர்க்கம் பலமடைய, கலையமுதனை உட்காரும்படி மாவை சேனாதிராசா பலமுறை குறிப்பிட்டார். எனினும், கலையமுதன் உட்காராமல் நியாயத்தை சுட்டிக்காட்டியபடியிருந்தார்.

இதனால், ஆத்திரமடைந்த மாவை சேனாதிராசா, “நீ இப்பொழுது இருக்காவிட்டால், உன்னை வெளியில் அனுப்புவேன்“ என எச்சரித்தார்.

அந்த பணத்தில் மாகாணசபை தேர்தலில் ஒவ்வொரு வேட்பாளருக்கும் 6 இலட்சம் படி வழங்கியதாகவும், பங்காளிக்கட்சிகளிற்கு வழங்கியதாகவும் சுமந்திரன் தெரிவித்தார்.

இறுதியில், ஏனையவர்கள் தலையிட்டு, “பழைய கதையை விடுவோம். இதை கிளறினால் கட்சிக்குத்தான் பாதிப்பு“ என கூறி, சமரப்படுத்தி, அந்த விவகாரத்தை மூடி வைத்தனர்.

இதேபோல, முல்லைத்தீவு இளைஞரணி பிரமுகர் பீற்றர் இளஞ்செழியன் கருத்து தெரிவித்தபோது, “நீ இரு. பேஸ்புக்கில் எல்லாம் கட்சியை பற்றி எழுதுகிறாய். உனக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை இருக்கிறது“ என மாவை குறிப்பிட, பீற்றர் இளஞ்செழியன் பொங்கியெழுந்தார். அவர் சரமாரியாக பேசியதில் மாவை திண்டாடி, தனது 10 தம்பிகளையும் (பொறும் தம்பி, இரும் தம்பி, பார்க்கலாம் தம்பி, அவசரப்படாதீர்கள் தம்பி….) துணைக்கழைத்தும் பலன் கிட்டவில்லை.

இறுதியில் ஏனையவர்கள் தலையிட்டு, பீற்றர் இளஞசெழியனை சமரசப்படுத்தி உட்கார வைத்தனர்.

இதேவேளை, தமிழ்பக்கத்துடன் பேசிய வடமராட்சியை சேர்ந்த தமிழ் அரசு கட்சியின் மகளிர் அணி பிரமுகர் ஒருவர் சில அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டிருந்தார்.

கடந்த வாரம் திருகோணமலைக்கு தாம் பயணம் மேற்கொண்டதாகவும், இதன்பேது 221 மில்லியன் ரூபாவை கனடா கிளை தமிழ் அரசு கட்சி பிரமுகர்களிற்கு வழங்கியதான சில ஆவணங்களை பிரமுகர் ஒருவர் காண்பித்ததாகவும் தெரிவித்தார்.

Comment here