இலங்கை

கோட்டபாயவிடம் பிச்சை எடுக்கும் சரவணபவன் MP

“எமது சொந்தங்களை கொத்துக்கொத்தாக கொன்று குவித்தவர். சரணடைந்தவர்களை பஸ் ஒன்றிற்குள் அடைத்து கிரேன் மூலம் கடலுக்குள் அமிழ்த்திக் கொன்றதாக ஒரு பத்திரிகையாளர் சொன்னார். அவர் எவ்வளவு கொடுமையானவர் என்பதற்கு உதாரணம், அவரிடம் கொண்டு செல்லப்பட்ட ஒருவர், அவரின் முன்பாக சிறுநீர் கழித்து விட்டார் என்றார்கள்.

தமிழர்கள் இப்படியானவரை ஆதரிக்க முடியுமா? எந்தக்காலத்திலும் இவர்களை மன்னிக்கக் கூடாது.“ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தில் யாழ் சங்கிலியன் தோப்பில் இப்படி மக்கள் முன் எழுச்சி உரையாற்றிய இலங்கை தமிழ் அரசு கட்சியின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன், அதே கோட்டாபய ராஜபக்சவிடம் தனது தொழிற்சாலைக்கு வரிவிலக்கு கோரிய சுவாரஸ்ய சம்பவம் நடந்துள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கும், ஊடக உரிமையாளர்களிற்குமிடையிலான சந்திப்பு நேற்று (12) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. ஊடக விவகாரங்கள் தொடர்பில் நடந்த அந்த கலந்துரையாடலில், குறுக்கே புகுந்து தனது இரும்பு ஆலைக்கு வரிவிலக்கு கோரியுள்ளார் தமிழ் மக்களின் பிரதிநிதி.கோட்டாபய ஜனாதிபதியான பின்னர், இன்னும் தமிழ் தேசிய கூட்டமைப்பினருடன் பேச்சு நடத்தியிருக்கவில்லை.

இந்த நிலையில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் எம்.பியான ஈ.சரவணபவன், பத்திரிகை உரிமையாளர்களுடனான சந்திப்பில் நேற்று கலந்து கொண்டிருந்தார். இதன்போது, தமிழ் மக்களின் பிரச்சனைகள் தொடர்பாகவோ, குறைந்த பட்சம் உதயனில் சுட்டுக்கொல்லப்பட்ட செய்தியாளர்களிற்கு நீதி கோராமல், தனது தொழிற்சாலைக்கு வரிவிலக்கு கோரிய அதிர்ச்சி சம்பவம் நடந்ததை தமிழ்பக்கம் அறிந்தது.கலந்துரையாடலின் இடையில், கோட்டாவிடம் வரிவிலக்கு கோரிக்கையை முன்வைத்தார்.வவுனியாவில் அமைந்துள்ள தனது இரும்புத் தொழிற்சாலைக்கு ரணில் அரசு வரிவிலக்கு தந்திருந்ததாகவும், இந்த அரசும் வரிவிலக்கு தர வேண்டுமென்றும் கோரிக்கை விடுத்தார்.ஊடகத்துறை தொடர்பான கலந்துரையாடலின் இடையில் அவர் இவ்வாறு தெரிவித்தது அந்த மண்டபத்தில் ஒருவித அசௌகரியத்தை உண்டாக்கியது.

ஜனாதிபதி தேர்தல் சமயங்களில் உதயன் பத்திரிகையில் தொடர்ந்து போலிச் செய்திகள் வெளியாகியதை அறிந்திருந்தபோதும் கோட்டாபய ராஜபக்ச அதைக்காட்டிக் கொள்ளாமல் நாசூக்காக கையாண்டார்.“இந்த விடயத்தை நீங்கள் நிதியமைச்சரிடம்தான் (மஹிந்த ராஜபக்ச) பேச வேண்டும்.

நான் இதில் தலையிட முடியாது“ என கோட்டாபய தெரிவித்தார்.

Comment here