Featuredதமிழீழம்

விடுதலைப்புலிகளின் களமாடும் வரலாற்றில் மறக்க முடியாத ஒரு படையணி

தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் பல புகழ்பூத்த படையணிகள் பற்றியும் அவற்றின் நீண்ட போரியல் வரலாறு பற்றியும் நாம் அறிய வேண்டியது மிகவும் கட்டாயமான ஒன்றாகும்.

ஆயினும் பல்வேறு காலகட்டங்களிலும் தேவைகருதி உருவாக்கப்பட்டு பின்னாளில் வேறு படையணிகளுடன் அல்லது பிரிவுகளுடன் இணைக்கப்பட்ட படையணிகள், பிரிவுகள் இப்போராட்ட வரலாற்றில் இருந்தன என்பது நம்மில் பலருக்குத் தெரிய வாய்ப்பில்லை. அடுத்த தலைமுறைக்கு அவைபற்றி எதுவுமே தெரியாமல் போகலாம்.

அந்தந்த காலகட்டங்களில் அவ்வப் படையணிகள், பிரிவுகள் ஆற்றிய போராட்டப் பங்களிப்புகள் வரலாற்றில் பதியப்படவேண்டிய மிகவும் தார்மீகக் கடமையாகும்.அந்தவகையில் பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களின் தொலைநோக்குடன் கூடிய முயற்சியில் தோற்றம்பெற்ற பூநகரிப் படையணி பற்றி் சற்றுக் குறிப்பிடுவது பொருத்தமானதாகும்.

பூநகரிக் கட்டளைப் பணியகம் என பூநகரிப் பகுதியில் நிலைகொண்டிருந்த அரசியல்துறைப் போராளிகள், ராஜன் கல்விப்பிரிவுப் போராளிகள் மற்றும் புதிய போராளிகள் எனப் பல்வேறு தரப்புப் போராளிகளுடன் 2007 இல் இப் படையணி உருவாக்கப்பட்டது.

அப்போது படையணியின் சிறப்புத் தளபதியாக லெப்.கேணல் ஈழப்பிரியனும் தளபதியாக கேணல் கீதனும் துணைத்தளபதியாக வேந்தனும் நியமிக்கப் பட்டனர்.மிக அதிகளவான புதிய இளம் போராளிகளைக் கொண்டதொரு படையணியாக இருந்த போதும் இப்படையணி களங்களில் காட்டிய வீரமும், ஈகமும், உணர்வுவெளிப்பாடும் மிக உன்னதமானவை.

இருபது வயதைக்கூட எட்டாத அந்த இளைய தலைமுறையின் உறுதியும் தாங்குமாற்றலும் உயர்வானவை.

பூநகரியைத் தளமாகவும் முக்கொம்பன் மற்றும் செம்மண்குன்று ஆகிய பகுதிகளை பயிற்சித் தளமாகவும் இப்படையணி கொண்டிருந்தது. மிகத் தாக்கமான பயிற்சிகள், சிறந்த தெளிவூட்டல், பொறுப்பாளர்களுக்கும் போராளிகளுக்கும் இடையேயான சிறந்த உறவு நிலை, புரிந்துணர்வு என்பன மிகக் குறுகிய காலத்தில் படையணியின் வளர்ச்சிக்கு வித்திட்டன.

மன்னார் களமுனையில் மிகக் கடுமையான சண்டைகள் இடம்பெற்றுக் கொண்டிருந்த வேளையில், இப்படையணி அங்கு அழைக்கப்பட்டது. இப்படையணியின் ஆண், பெண் போராளிகள் அங்கு நிலைப்படுத்தப்பட்டனர். அடம்பனைக் கைப்பற்ற படையினர் மேற்றுக்கொண்ட பல முன்னேற்ற நடவடிக்கைகள் இப்போராளிகளால் வெற்றிகரமாக முறியடிக்கப்படடன. ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன.

மன்னார் பரந்தவெளிகளில் எதிரியின் கடுமையான எறிகணைத் தாக்குதல்கள், ‘ராங்கி’ என்னும் கவச ஊர்தித் தாக்குதல்கள், பதுங்கிச்சூட்டுத் தாக்குதல்கள் என்பனவற்றிற்கு மட்டுமன்றி இயற்கையின் இரக்கமற்ற பெரும் தாக்குதல்களுக்கும் இவர்கள் தாக்குப் பிடிக்கவேண்டியிருந்தது.

ஆறடி உயர மண்ணணை அரையடியாகக் கரைந்த நிலையிலும், நகர்வகழிகளில் மார்பளவு நீர் நிறைந்திருந்தபோதும் அந்தக் களமுனையில் அவர்கள் நிலைத்திருக்க வேண்டியிருந்தது.

இரவுபகலின்றிப் பெய்த பெரு மழையில் விடியவிடிய நனைந்தபடி குளிரில் உடல் விறைக்க, அதிகாலையில் அலையெனவரும் எதிரியுடன் மோதவேண்டியிருந்தது.இப்படையணியில் ஆண்போராளிகளுக்கு நிகராகப் பல சமயங்களில் அதற்கு மேலாக பெண் போராளிகள் செயற்பட்டனர். பல களமுனைகளில் ஆண் போராளிகளை, பெண் போராளிகள் வழிநடத்திச் செயற்பட்ட வரலாறுகளும் உண்டு.

முகமாலைப் பகுதிகளிலும் இப்படையணி எதிரிகளுடன் சமரிட்டது. படைகளிலிருந்து விட்டோடுதல் பொதுவானது எனினும், இப்படையணியில் அது மிக மிக அரிதாகவே இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

வீட்டிற்கொருவர் என இணைக்கப்பட்ட போராளிகளே இப்படையணியில் அதிகம் இருந்த போதும் பற்றுறுதியிலும் வீரத்திலும் தாம் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல என்பதை இவர்கள் நிரூபித்தே வந்துள்ளனர்.

விடுமுறையில் சென்றாலும், காயம்பட்டு மருத்துவமனை சென்றாலும் விரைந்து களம் திரும்பவேண்டும் என்ற உணர்வு அவர்களிடம் என்றும் மேலோங்கியே நின்றது.

இப்படையணியின் ஒருவருட நிகழ்வில் களங்களில் திறமையாகச் செயற்பட்டவர்களுக்குச் சான்றிதழ்களை வழங்கிப்பேசிய முதுநிலைத்தளபதிகள் பிரிகேடியர் பானு ,பிரிகேடியர் தீபன் ஆகியோரின் கருத்துக்கள் இவற்றிற்குச் சான்றாக அமைந்தன.

அதுமட்டுமன்றி, இப்படையணியின் செயற்பாடுகளை அவதானித்து வந்த தேசியத்தலைவர் மிக இறுக்கமான காலச் சூழ்நிலையிலும் இந்த இளம் போராளிகளை சந்தித்து அளவளாவியது அவர்களுக்கு கிடைத்த மற்றொரு சிறப்பாகும்.

அனுபவம் மிக்க மூத்த போராளிகளாகவோ அல்லது அகவை அதிகம் கொண்டவர்களாகவோ இவர்களில் அநேகர் இல்லையாயினும், உணர்விலும் துணிவிலும் இவர்கள் என்றும் குறைந்து போய்விடவில்லை.

“ராங்கி” கவச ஊர்திகளால் காவலரண்கள் தரைமட்டம் ஆக்கப்பட்டபோதும், தளராது நிலைத்து நின்று முறியடித்த இளம் போராளிகள்…… ஒற்றையாளாக நின்று காப்பரண் காத்தவர்கள்…… பக்கவாட்டுக் காவலரண் எதிரியால் கைப்பற்றப் பட்டபோதும் வாரக்கணக்கில் நிலைத்து நின்று போரிட்டவர்கள…… காயமடைந்தும் களம் விட்டகலாதவர்கள்….… காவலரணை விட்டு வெளியேற மறுத்து இறுதிவரை இலக்குச் சொல்லி இல்லாமல் போனவர்கள்….. காதலனை, காதலியை களத்தில் இழந்தபோதும் கடுகளவும் கலங்காது தம்பணி தொடர்ந்தவர்கள்……

இப்படையணியின் தளபதிகளாக, பொறுப்பாளர்களாக இருந்தவர்கள் அவரவர் பணிகளை முன்மாதிரியாகவும் பொறுப்புணர்வுடனும் முன்னெடுத்துச் சென்றனர்.

அந்த வகையில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட தளபதிகளான லெப்.கேணல் ஈழப்பிரியன், கேணல் கீதன் மற்றும் களங்களில் போராளிகளை வழிநடத்திய லெப்.கேணல் ரகு, லெப்கேணல் ஜெரோம், லெப். கேணல் மாறன், லெப். கேணல் செஞ்சுடர், மேஜர். குமரதேவன், மேஜர். கலைச்சோழன், கப்டன். ஆதிரை, சிறப்பு நடவடிக்கை அணிக்குப் பயிற்சி அளித்த லெப்.கேணல் நிசாந்தன் ஆசிரியர் உள்ளிட்ட பலர் நினைவில் கொள்ளத் தக்கவர்கள்.

போர் இறுதிக்கட்டத்தை அண்மித்த காலக்கட்டத்தில் இப்படையணியின் ஆண் போராளிகள் இம்ரான் பாண்டியன் படையணியுடனும், பெண் போராளிகள் வேறு படையணிகள், பிரிவுகளுடனும் இணைக்கப்பட்டனர்.

அதன்பின்னர், திரு.வேலவனைச் சிறப்புத் தளபதியாகக் கொண்டிருந்த இம்ரான் பாண்டியன் படையணியின் தளபதியாக லெப்.கேணல் ஈழப்பிரியனும் துணைத்தளபதியாக கேணல்.கீதனும் நியமிக்கப்பட்டனர்.

பூநகரிப் படையணியின் போராளிகள் வேறு படையணிகளில், பிரிவுகளில் உள்வாங்கப்பட்டபோதும் அவர்கள் தமது தனித்துவமான பண்புகளுடனும் அர்ப்பணிப்புடனும் தொடர்ந்தும் பயணித்தனர்.

பூநகரிப்படையணியின் செயற்பாட்டுக் கால அளவு குறுகியதாயினும் அதன் செயற்றிறனும் வீரமும் அர்ப்பணிப்புகளும் மிக வீரியமானவை. அந்த வகையில் அதன் மாவீரர்களும் போராளிகளும் நினைவில் கொள்ளப்பட வேண்டியவர்களே.

 

Comment here