பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் அலுவலகத்தில் நடந்தது என்ன?

January 21, 2013 Comments Off on பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் அலுவலகத்தில் நடந்தது என்ன?
பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் அலுவலகத்தில் நடந்தது என்ன?

யாழ்ப்பாண குடாக்கடல் மற்றும் மன்னார் கடற்பகுதிகளில் டைனமைற் மூலம் மீன்பிடி என்பது ஆண்டாண்டு காலமாக நீடிக்கும் சாதாரண விடயமாகும்.

டைனமைற் ரக வெடி பொருட்களை நீர்மட்டத்திற்கு மேலாக வெடிக்க வைப்பதன் மூலமாக எதிர்பாராத அதிர்வ லைக்களை ஏற்படுத்தி ஒட்டுமொத்த மீன்களையும் கொன்று அறுபடை செய்வதே அந்த நுட்பமாகும்.

அந்தவகையிலேயே தமிழ்நாட்டிலிருந்து அடிக்கடி, ஜெலிக்னைற் குச்சிகள் கடத்தப்பட்டு பிடி படுகின்ற கதை அமைகின்றது. யாழ். குடாக்கடலில் மீன்பிடியில் ஈடுபடுபவர்களும் இத்தகைய டைனமைற் மீன்பிடியை கடற்படையின் மூலம் முன்னெடுப்பது ஒன்றும் புதிதல்ல.

தேவையான வெடிபொருட்களுக்காக எறிகணையொன்றை வெட்டிப்பிளக்க முற்பட்டு இருவர் பரிதாபகரமாக உயிரிழந்ததும் பெரும்பாலானவர்களுக்கு நினைவிருக்கலாம்.

விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளியான வசந்தன். குருநகரை சொந்த இடமாகக் கொண்டவராவார். இறுதி யுத்தத்தின் பின்னர் வன்னியின் பல பகுதிகளிலும் பரவிக்கிடக்கின்ற வெடிபொருட்களை மீட்டெடுத்து இத்தகைய மீன்பிடியில் ஈடுபடுவோருக்கு விற்பதென்பது சிலருக்கு தொழிலாகவே இருக்கின்றது.

புதுக்குடியிருப்பு பகுதியில் அகப்பட்ட ஒரு பகுதி வெடிபொருட்களை குருநகர் மீனவர்களுக்கு விற்பதற்கு வசந்தன், விலை பேசியிருந்தார். கொள்வனவு செய்வதற்கு தயாராக இருந்த இரு தரப்புக்களுக்கிடையிலான முரண்பாட்டினால் வசந்தன் காட்டிக்கொடுக்கப்பட்டு சகபாடியுடன் பொலிஸாரிடம் அகப்பட்டுக் கொண்டார்.

கூடவே அவரது நண்பர் ஒருவரும் இந்தப் பொறியினுள் சிக்குண்டிருந்தார். சுலபமாக தான் தப்பிக்க வழிதேடிய வசந்தன் நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறீதரனின் ஆதரவாளர் என தன்னை அடையாளப்படுத்திக் கொள்ள முற்பட்டுள்ளார்.

நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலிலும், அதனைத் தொடர்ந்து வந்த தேர்தல்களிலும், கூட்டமைப்பின் வெற்றிக்காக சிறீதரன் அலுவலகத்தில் வசந்தன் சிறிதுகாலம் பணியாற்றியிருந்தார்.

இதை தவிர அவர் எவ்வகையிலும் அந்த அலுவலகத்துடன் தொடர்புபட்டிருக்கவில்லை என்பதே உண்மை. வெடிபொருள் சகிதம் ஒருவர் அகப்பட்டுக் கொண்ட விடயம் சிறீதர் தியட்டர் பக்கம் சென்றடையவே, நீண்டநாட்களாக எதிர்பார்க்கப்பட்ட இரையொன்று பொறியில் அகப்பட்டவிட்டதாக தியட்டர்காரர்கள் மகிழ்ச்சி கொண்டாடினார்கள்.

சிறீதரன் அலுவலகத்தில் தேடுதல் நடத்துவது அவர்களது வலது, இடது கரங்களாக இருந்துவரும் வேழமாலிகிதன் மற்றும் பொன்காந்தனை சிக்கவைக்க சதித்திட்டங்கள் தீட்டப்பட்டன.

கிளிநொச்சியில் அரசியல் செய்து கொண்டிருக்கும் சந்திரகுமாரின் கோரிக்கையின் பெயரில் யாழ்ப்பாணத்திலிருந்து அவசர அவசரமாக றுசாங்கள் எனப்படும் ஈ.பி.டி.பி உறுப்பினரும், தன்னையொரு ஊடக மேதாவி எனக்காட்டிக் கொள்பவருமான றுசாங்கன் கிளிநொச்சிக்கு அழைக்கப்பட்டார்.

வசந்தன் சகிதம் கிளிநொச்சி தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அலுவலகத்திற்குச் சென்ற பயங்கரவாத குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவொன்று தேடுதல் என்ற பெயரில் தன்னிச்சையாக ஒவ்வொரு அறைகளுக்குள்ளும் சென்று தேடுதலை தொடங்கினர்.

இத்தேடுதல் தொடர்பாக மக்கள் பிரதிநிதி என்றவகையில் தமக்கு தகவல் கூட பயங்கரவாத குற்றத்தடுப்பு பொலிஸார் வழங்கியிருக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்தார்.

சி.சிறீதரனின் அலுவலகம் என்பது எந்தவொரு இரகசியமும் அற்ற ஒரு எளிமையான அலுவலகமே சமயலறை என்பதில் என்றுமே சமையல் நடந்ததில்லை. மூன்றுவேளை உணவுகளும் எங்கேனும் உணவகத்திலிருந்து எவரனும் காசு கொடுத்தே வாங்கி வருவார்கள்.

இரவு வேளைகளில் படுப்பதற்கு பாய் ஒன்றுக்காக ஆதரவாளர்கள் பிடுங்குப்பட்டுக் கொள்வதை சாதாரணமாக பார்க்க முடியும். இருக்கின்ற ஒரேயொரு மலசலகூடத்திற்கும் கூட நீண்ட வரிசையொன்று காத்திருக்கும்.

தேவைகளையும், உதவிகளையும் பெற்றுக்கொள்ள ஒரு நீண்ட மக்கள் கூட்டம் நாள்தோறும் அங்கிருக்கும். புலம்பெயர் தேசத்து உறவுகளது உதவிகள் எதோ பகிர்ந்தளிக்கப்பட்டு எவரையுமே வெறுங்கையுடன் செல்ல அங்கிருப்பவர்கள் அனுமதிப்பதில்லை.

ஆகக்குறைந்தது ஒரு உணவுப் பொட்டலம் ஏனும் கிடைக்கும் என்கிறார் கிளிநொச்சியை சேர்ந்த பொதுமகன் ஒருவர். அபிவிருத்தி, இயல்புவாழ்வு எனக்கூறிக் கொண்டு அரசியல் செய்ய வந்த பலரும் வடகிழக்குப் பகுதிகளில் தொடரும் இராணுவ ஆட்சியினால் கந்தறுந்து போயிருக்கின்றனர்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இளம் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையிலும் மக்களுக்காக அஞ்சாமல் குரல் கொடுப்பவர் என்ற வகையிலும், சிறீதரனுக்கான மக்கள் ஆதரவுப்பலம் தொடர்ந்தும் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு சிறீதரன் போன்ற இளம் சமுகத்தினர் தலைமை தாங்கவேண்டும் என்ற கோசம் அண்மைக்காலமாக புலத்திலும், தாயத்திலும் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியுள்ளது.

இவற்றுக்கப்பால் அமெரிக்கா மற்றும் இந்திய தூதுவராலய மட்டங்களில் அவருக்குள்ள தொடர்புகளும் சிக்கவைப்பதற்கு காரணமாக இருக்கலாம் என நம்பப்படுகிறது.

குறிப்பாக வன்னியில் யுவதிகள் படைத்தரப்பில் இணைக்கப்பட்டமை, நில ஆக்கிரமிப்பு, பெளத்த மயமாக்கல், மூன்றாம் தர அரசியல் என அனைத்தையும் அம்பலப்படுத்துவதில் சிறீதரனும், அவரது சகபாடிகளும் பின்னின்றதே கிடையாது.

குறிப்பாக வன்னியின் எந்தவொரு குடியேற்றத்திட்டமாயினும் சரி, நில ஆக்கிரமிப்பாயினும் சரி, இராணுவ அத்துமீறல்களாயினும் சரி, விரல் நுனிகளில் வைத்து தகவல் சொல்ல இவர்களால் முடிந்தது.

அன்று நடந்தது….!

தேடுதல் கட்சி அலுவலகத்தில் நடந்து கொண்டிருந்தவேளை அவசர அவசரமாக உள்ளே நுழைந்த றுசாங்கனுடன், தினமுரசு பத்திரிகையின் முகவர் என்ற அடையாளத்துடன் மிகமோசமான பெண் இராணுவப் புலனாய்வாளியுமான வதனி என்பவரும், அரச தொலைக்காட்சி ஊடகவியலாளர் ஒருவரும் உள்ளே அழைக்கப்பட்டிருந்தனர்.

சம்பவம் அறிந்து அங்கு சென்றிருந்த குடாநாட்டின் நடுநிலமை ஊடகங்களான உதயன், தினக்குரல், வலம்புரி மற்றும் இணைய ஊடகவியலாளர்கள், தொலைக்காட்சி ஊடகவியலாளர்கள்,
அடங்கிய குழுவொன்று உட்செல்ல பல தடவைகள் முயற்சிகளை மேற்கொண்டிருந்தபோதும் முடியாமல் போனதுடன், அங்கிருந்து அச்சுறுத்தி துரத்தப்பட்டனர்.

சாதாரணமாக காற்சட்டை பைக்கற்றுக்குள் வைத்து எடுத்துவரக் கூடிய 350கிராம் சீ4 வெடிபொருளை கண்டெடுத்து விட்டதாக கூறி பிரசாரங்கள் ஆரம்பமாகின.

எனினும் இணைய ஊடகங்கள் திட்டமிட்ட இம்மோசடியை அம்பலப்படுத்த சிறீதரன் தரப்பினர் மக்களிடையே அனுதாப மொன்றை சுலபமாக எட்டிக்கொண்டனர்.

இந்நிலையில் தியட்டரிலிருந்து வந்த உத்தரவொன்றையடுத்து அவசர அவசரமாக கிளிநொச்சி மருந்தகம் ஒன்றிலிருந்து (பாதுகாப்பு காரணங்களை முன்னிறுத்தி அந்த மருந்தக உரிமையாளரின் பெயரை நாம் குறிப்பிடவில்லை) புலனாய்வுப் பிரிவினரால் ஆணுறைகளும், படைமுகாம் ஒன்றிலிருந்து (கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகிலுள்ள படைமுகாமிலிருந்து ஆபாச சீ.டிக்கள் எடுத்துவரப்பட்டன) சீ.டிக்கள் எடுத்துவரப்பட்டு பொதிகளில் செருகப்பட்டதுடன் சீ.டி கோப்பினுள்ளும் நுழைக்கப்பட்டன.

இவற்றுக்கப்பால் அங்குள்ள சுப்பர் மார்கெட்டில் றுசாங்கனால் கொள்வனவு செய்யப்பட்டு வசந்தனிடம் உள்ளே வைக்க கையளிக்கப்பட்ட பொதியினுள் என்ன இருந்தது என்பதையும் றுசாங்கனே சொல்லியாக வேண்டும்.

இது தொடர்பான முதலாவது செய்தியினை தனது இணைய ஊடகமொன்றில் பரபரப்பாக பதிவேற்றிய றுசாங்கன் கட்டுநாயக்கா விமானத் தளம் தாக்கப்பட்டுவிட்டது போன்று புகைப்படங்களுக்காக காத்திருக்க வாசகர்களுக்கு அழைப்பும் விடுத்திருந்தார்.

இலங்கை வரலாற்றில் அதுவும் தமிழர்களை முன்னிறுத்தி தேடுதல் வேட்டை நடத்தியதும், அங்கு சீ4 கண்டெடுக்கப்பட்டதும் எத்தனையாவது அதிசயம் என்பதை றுசாங்கனே கூறினால் நல்லது.

அலுவலகம் மீதான தேடுதல் தொடர்பான செய்தி மாலை 5.57க்கு கொழும்பு இணைய ஆங்கில ஊடகமொன்றில் பதிவேற்றப்பட்டிருந்தது. சுமார் கிளிநொச்சி நகரிலிருந்து அவ்வலுலகத்தினை சென்றடைய 10நிமிடம் மேலும் தேவைப்படுமானால் 6.07க்கு பின்னரே றுசாங்கனால் அங்கு சென்றடைந்திருக்க முடியும். ஆனால் 5.30ற்க்கு உச்சபட்ச தேடுதல் நடந்தவேளை அங்கு சென்றடைய றுசாங்கன் பெற்றிருக்கும் ஊடக ஞானஸ்த்தானம் சாத்தியமாக இருந்ததா..?

எது எவ்வாறாக இருப்பினும் நீங்கள் கேட்ட வரிவிலக்கற்ற வாகனம், மதுபான விற்பனை நிலையத்திற்கான அனுமதிச் சான்றிதழ், பல்கலைக்கழகத்தில் மனைவிக்கு விரிவுரையாளர் பதவி, மூதவையில் தங்களுக்கொரு இடம், இன்றும் பல உறுதியளிக்கப்பட்டவைகள் உங்களுக்கு வந்து சேரும், ஆனால் தனது மக்களுக்காக குரல் எழுப்பியதற்காக வேழமாலிகிதன், எதோ ஒரு சித்திரவதைக் கூடத்தில் இந்த தருணத்தில் தலைகீழாக தொங்கி க்கொண்டிருக்கலாம்.

இராணுவ வேட்டையில் தப்பிக்க பொன்காந்தன் ஏதோவொரு குக்கிராமத்தின் காட்டுக்குள் பதுங்கியிருக்கலாம். சீறீதரன் தன் கைதை எதிர்பார்த்து காத்திருக்கலாம்.

பொலிஸ் பாதுகாப்பு விலக்கப்பட்டதன் பின்னர் வந்து முளைத்த சீடி பற்றியும், ஆணுறை பற்றியும், ஆபாச சீ.டிக்கள் பற்றியும் சித்திரவதைகளின் பின்னர் வேழமாலிகிதன் ஒரு ஒப்புதல் வாக்கு மூலத்தைக் கொடுக்க முடியும்.

தன் நாட்டின் பிரதம நீதியரசரையே கொள்ளைக்காரியென கூறி வீட்டுக்கு அனுப்ப முடிந்த இந்த அரசின் நீதிமன்றில் நியாயம், உண்மை வெளிப்படும் என நம்பும் உங்களை இந்த மக்கள் மன்னிக்கட்டும்.

பொம்மி
karu.bomi@gmail.com

239 total views, 1 views today