ஜெனிவாவில் சிறிலங்காவுக்கு எதிரான மற்றொரு கண்டனத் தீர்மானம்?

January 21, 2013 Comments Off
ஜெனிவாவில் சிறிலங்காவுக்கு எதிரான மற்றொரு கண்டனத் தீர்மானம்?

ஜெனிவாவில் வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில், அமெரிக்காவும், இந்தியாவும் இணைந்து சிறிலங்காவுக்கு எதிரான மற்றொரு தீர்மானத்தைக் கொண்டு வந்து நிறைவேற்றுவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதில் சிறிலங்கா அரசாங்கம் பெரியளவிலான முன்னேற்றத்தைக் காண்பிக்காததன் அடிப்படையிலேயே இந்தத் தீர்மானம் கொண்டு வரப்பப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விசாரிக்கப்பட வேண்டியவை என்று நல்லிணக்க ஆணைக்குழுவால், இனங்காணப்பட்ட குறிப்பிட்ட சில சம்பவங்களில், சனல் 4 காணொளி உள்ளிட்ட ஏழு அல்லது எட்டு சம்பவங்கள் தொடர்பாகவே விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளதாக நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்தவாரம் வெளிநாட்டுத் தூதுவர்களுடனான சந்திப்பின் போது, நல்லிணக்க ஆணைக்குழுவின் 35 வீதமான பரிந்துரைகள் மட்டுமே, நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக, சிறிலங்கா அதிபரின் செயலர் லலித் வீரதுங்க குறிப்பிட்டிருந்தார்.

அதேவேளை, வடக்கில் படைக்குறைப்பு, அரசியல் தீர்வு, தமிழர்களின் நிலங்கள் அபகரிக்கப்படுவது உள்ளிட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளில் பிரதானமான பரப்பு, சிறிலங்கா அரசாங்கத்தினால், தொட்டுக் கூடப் பார்க்கப்படவில்லை என்று மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் பாக்கியசோதி சரவணமுத்து தெரிவித்துள்ளார்.

“அதைவிட புதிய பல விவகாரங்கள் உள்ளன. தலைமை நீதியரசர் சிராணி பண்டாரநாயக்க பதவி நீக்கப்பட்டது, யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின் கைது என்பன ஜென்வாவில் கேள்விக்குட்படுத்தப்படக் கூடிய விவகாரங்களாக இருக்கும்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

152 total views, 1 views today