ஐ.நா மனித உரிமைச்சபையில் கடும்அதிர்வலைகளை ஏற்படுத்திய சனல்-4 ஆவணப்படம்

March 1, 2013 Comments Off on ஐ.நா மனித உரிமைச்சபையில் கடும்அதிர்வலைகளை ஏற்படுத்திய சனல்-4 ஆவணப்படம்
ஐ.நா மனித உரிமைச்சபையில் கடும்அதிர்வலைகளை ஏற்படுத்திய சனல்-4 ஆவணப்படம்

சிறிலங்கா அரசாங்கத்தின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் ஐ.நா மனித உரிமைச் சபையில் திரையிடப்பட்ட சனல்-4 தொலைக்காட்சியின் ‘போர் தவிப்பு வலயம்’ ஆவணப்படம், பார்வையாளர்கள் மத்தியில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.

அத்தோடு பெருத்த வரவேற்பினையும் பெற்றுள்ளதாக ஜெனீவாவில் இருந்து நாடுகடந்த தமிழீழ அரசாங்கப் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

ஏலவே வெளிவந்திருந்த இந்த ஆவணப்படத்தின் முன்னோட்ட காட்சிகளும், ஒளிப்படங்களும் பெரும் எதிர்பார்ப்புகளை பல்வேறு மட்டங்களில் ஏற்படுத்தியிருந்தமை சிறிலங்கா அரசாங்கத்துக்கு கடும் நெருக்கடியினை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில் இன்று வெள்ளிக்கிழமை அனைத்துலக மன்னிப்பு சபை, மனித உரிமைகள் கண்காணிப்பகம் மற்றும் சனல்-4 தொலைக்காட்சியின் ஏற்பாட்டில் ஐ.நா மனித உரிமைச்சபை வளாகத்தின் 23ம் மண்டபத்தில் திரையிடப்பட்டிருந்தது.

ஐ.நா மனித உரிமைச் சபையில் மையங்கொண்டுள்ள பல்வேறு நாடுகளது பிரதிநிதிகள், இராஜதந்திரிகள், மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள், ஐ.நா அதிகாரிகள், ஊடகவியலாளர்கள் என பல்வேறு தரப்பினைச் சேர்ந்த 300 பேருக்கும் மேற்பட்டவர்கள் அரங்கு நிறைத்திருந்தனர் நா.தமிழீழ அரசாங்கத்தின் ஐ.நா மனித உரிமைச்சபை ஓருங்கிணைப்பாளர் சுகிந்தன் முருகையா அவர்கள் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா அரசாங்கத்தின் பணிப்பின் பேரில் 2008ம் ஆண்டு வன்னியில் இருந்து ஐ.நா பணியாளர்கள் வெளியேறுகின்ற காட்சிகளுடன் விரிகின்ற ஆவணப்படமானது சிறுவன் பாலசந்திரனின் படுகொலையுடன் நிறைவு காண்கின்றது.

திரையிடலுக்கு முன்னதாக கருத்துரைத்திருந்த இந்த ஆவணப்படத்தின் இயக்குனர் callum macrae அவர்கள், தான் ஓர் ஊடகனாக நடந்தேறிய மனித உரிமை மீறல்கள் குறித்த பதிவுகளை செய்திருப்பதானது தொழில் தர்மமே அன்றி சிறிலங்கா அரசுடனான தனிப்பட்ட பகை நிமிர்தம் அல்ல எனத் தெரிவித்துள்ளார்.

திரையிடலினைத் தொடர்ந்து கருத்துப் பரிமாற்றம் தொடர்பில் இந்தியாவில் இருந்து ஜெனீவா சென்றுள்ள நா.தமிழீழ அரசாங்கத்தின் ஐ.நா மனித உரிமைச் சபை வளஅறிஞர் குழுப்பிரதிநிதி பேராசிரியர் பொல் நியூமன் அவர்கள் தெரிவிக்கையில் :

இதில் பிரதானமாக முன்னாள் ஐ.நா அதிகாரி கோல்டன் வைய்ஸ் ஐ.நா நிபுணர் குழுப் பிரதிநிதி யாஸ்மின் சுக்கா ஆகியோர் கருத்துரைகளை வழங்கியிருந்தனர்.

மனித உரிமை அமைப்புக்கள் – ஊடகங்களை என சர்வதேசத்தின் பிரசன்னத்தினை வெளியேற்றிவிட்டு நடத்தப்பட்ட யுத்தம் இதுவென கருத்துரைந்திருந்த யாஸ்மின் சுக்கா அவர்கள் ஓரு குழந்தை மேல் யாராவது போரை நடத்துவார்களா சிறுவன் பாலசந்திரனின் படுகொலை தொடர்பில் தெரிவித்திருந்தார்.

ஜெனீவாவுக்கான சிறிலங்காவின் தூதுவர் ரவிநாத் ஆரியசிங்கவுக்கு கருத்துக்களை பதிவு செய்வதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டபோது வழமைபோல் இந்த ஆவணப்படத்தினை முற்றாக நிராகரித்திருந்ததோடு சிறிலங்காவுக்கு களங்கம் ஏற்படுத்துகின்ற முயற்சி இதுவென குற்றஞ்சாட்டியிருந்தார்.

கருத்துப்பரிமாற்றத்தின் நிறைவில் மனித உரிமைக் கூட்டத் தொடரில் பங்கெடுத்திருக்கும் அனைவரும் போரினால் பாதிக்கப்பட்டு மக்களின் குரலாக ஒலிப்போம் என கூட்டாக அறைகூவல் விடுத்திருந்தனர்.

231 total views, 1 views today