”இலங்கைக்கு ஆதரவான நிலையையே இந்தியா எடுக்கும்!” இரகசியம் சொல்லும் டக்ளஸ்! – ஜூனியர் விகடன்

March 2, 2013 Comments Off on ”இலங்கைக்கு ஆதரவான நிலையையே இந்தியா எடுக்கும்!” இரகசியம் சொல்லும் டக்ளஸ்! – ஜூனியர் விகடன்
”இலங்கைக்கு ஆதரவான நிலையையே இந்தியா எடுக்கும்!”  இரகசியம் சொல்லும் டக்ளஸ்! – ஜூனியர் விகடன்

விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன் கொடூரமாகக் கொல்லப்பட்ட காட்சிகள் உலகையே உலுக்கிக்கொண்டு இருந்த வேளையில், நம் ஊர் தமிழர்கள் கச்சதீவை நோக்கி அணிதிரண்டனர்.
கடந்த மூன்று ஆண்டுகளாக கச்சத்தீவு புனித அந்தோணியார் கோயில் திருவிழா, இலங்கை அரசின் அனுமதியுடன் நடந்து வருகிறது.

இந்த ஆண்டுக்கான திருவிழா பெப்ரவரி 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் நடந்தது. அந்தத் திருவிழாவில் பங்கேற்ற இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் பேசினோம்.

கேள்வி: போர் முடிந்து விட்டது என்றாலும் இலங்கையில் இப்போதும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு சம்பவங்கள் குறைந்துவிடவில்லையே?

பதில்: இலங்கையில் உள்ள சில தமிழர் கட்சிகள், பத்திரிகைகள் தவறான செய்திகளையே வெளியிடுகின்றன. சமூகம் என்றால் சில குறைபாடுகள் இருக்கத்தான் செய்யும். தமிழகத்தில் நடக்கும் கொலை, வன்முறை சம்பவங்கள்கூட இலங்கையில் இல்லை. கடந்த மூன்று ஆண்டுகளாக தமிழர்களுக்கு எந்தப் பிரச்னையும் நடக்கவில்லை. எங்கள் மக்கள் சந்தோஷமாகத்தான் வாழுறோம். அதற்கு நாங்களே சாட்சி. சமாதானம் இல்லை என்றால், நாங்கள் எப்படி இங்கே வர முடியும்?

கேள்வி : ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படும் தீர்மானம் பற்றி உங்கள் கருத்து என்ன?

பதில்: தீர்மானம் வந்த பின்தான், அதுபற்றி பேச முடியும். கொண்டு வரப்படும் தீர்மானத்தில் உண்மை இருக்குமானால், அவை குறிப்பிடும் தவறுகளை திருத்திக் கொள்வோம். எங்களைப் பொறுத்தமட்டில் எங்கள் பிரச்னையை நாங்களேதான் தீர்த்துக் கொள்ள முடியும். இதில் இந்தியா உள்ளிட்ட நாடுகள் அனைத்தும் பிரசவ காலத்தில் உதவும் மருத்துவரின் வேலையை மட்டுமே செய்ய வேண்டும்.

கேள்வி: இந்திய அரசு கொடுக்கும் உதவிகள் இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு முழுமையாகக் கிடைப்பதுகூட இல்லையே?

பதில்: இது தவறான தகவல். இந்திய அரசு கொடுக்கும் உதவிகள் அனைத்தும் தமிழர்களுக்கே வழங்கப்படுகிறது. அதற்குச் சாட்சியாக இலங்கையில் உள்ள இந்தியத் தூதர் இருக்கிறார். அதிலும் நம்பிக்கை இல்லை என்றால், உங்களை நேரில் அழைத்துச் சென்று காட்டுகிறேன்.

கேள்வி: கிளிநொச்சி, வவுனியா போன்ற தமிழர் பகுதிகளில் சிங்களவர்களின் கட்டாயக் குடியேற்றம் நடப்பதாகவும், பூநகரியில் 6,000 தமிழ் குடும்பங்களுக்கு மத்தியில் 31 ஆயிரம் இராணுவத்தினர் குடியமர்த்தப்பட்டு இருப்பதாகவும் சொல்லப்படுகிறதே?

பதில்: பயங்கரவாதிகளுக்கு எதிராக இலங்கை அரசு ஒரு போரை நடத்தி முடித்திருக்கிறது. அதற்கு நாங்களும் ஒரு காரணமாக இருந்திருக்கிறோம். போருக்குப் பின் தேவையான பாதுகாப்பு கருதியே அரசு அந்த நடவடிக்கையை மேற்கொண்டு இருக்கிறது. அல்லாமல், தமிழர்களை அச்சுறுத்துவதற்காக அல்ல. தமிழர்கள் மகிழ்ச்சியுடனே இலங்கையில் வாழ்கிறோம்.

கேள்வி: தமிழர்கள் நிம்மதியாக வாழ்வதாக நீங்கள் சொல்கிறீர்கள். ஆனால் ‘தமிழர்களுக்கு சம உரிமையே கிடையாது’ என ராஜபக்ஷே பேசியிருக்கிறாரே?

பதில்: அந்த செய்தி தவறானது. ஜனாதிபதி அப்படிப் பேசவே இல்லை.

கேள்வி: சிறுவன் பாலச்சந்திரன் கொல்லப்பட்ட விதம் குறித்து வெளியான செய்திக்கு உடனடியாக மறுப்பு வெளியிட்ட இலங்கை அரசு, ஜனாதிபதி அப்படிப் பேசவில்லை என ஏன் மறுக்கவில்லை?

பதில்: அந்தச் செய்தி இங்கு வரவில்லை (உலகம் முழுதும் வெளியான செய்தி இலங்கையில் மட்டும் வெளியாகவில்லையாம்!). பாலச்சந்திரன் கொலைக்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூறும் நீங்கள், புலிகள் நடத்திய தாக்குதல் குறித்து நடவடிக்கை எடுக்க ஏன் வலியுறுத்தவில்லை?”

கேள்வி: புலிகள் முற்றிலும் அழிக்கப்பட்டுவிட்டார்கள் என அறிவித்துவிட்டீர்கள். அப்படி இருக்கையில், இப்போது யார் மீது நடவடிக்கை எடுக்க முடியும்?

பதில்: ‘புலிகள் இயக்கம் அழிந்தாலும் அவர்களது கொள்கைகள் இன்னும் உயிருடன்தான் இருக்கிறது. உதாரணத்துக்கு தமிழ்நாட்டில் எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பின்னும் அவரது கொள்கைகள் எப்படி நிலைத்திருக்கிறதோ… அதேபோல் இலங்கையிலும் புலிகளின் கொள்கைகள் நிலைத்திருக்கிறது. அதனை தமிழர் கட்சிகள் சில கடைப்பிடித்து வருகின்றன.

கேள்வி: இந்திய மீனவர்கள் தொடர்ந்து கொலை செய்யப்பட்டு வருகிறார்கள். அதற்கு உங்களது பதில் என்ன?

பதில்: இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்பகுதிக்குள் வந்து தடைசெய்யப்பட்ட ‘ரோலர் மடி வலை’களை வைத்து மீன்பிடித்துச் செல்வதால், இலங்கை மீனவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இலங்கை மீனவர்களின் வலைகளையும் சேதப்படுத்திவிடுகின்றனர். இதனால் இலங்கைக் கடற்பகுதியிலே மீன்வளம் முற்றிலுமாக அழிந்துவிடும். எங்கள் தரப்பில் பேசுவதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். தமிழக மீனவர்கள் குறித்து தமிழக அரசுதான் முடிவு எடுக்க வேண்டும்.

கேள்வி: ஜெனிவா மனித உரிமை ஆணையத்தில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கும் எனச் சொல்லப்படுகிறதே?

பதில்: ஏற்கெனவே இலங்கை மீது கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை எதிர்க்க இருப்பதாக இந்தியா சொன்னது. ஆனால், கடைசி நேரத்தில் ஆதரித்து வாக்களித்தது. அதேபோல், இப்போது தீர்மானத்தை ஆதரிக்கப்போவதாகச் சொல்லி இருக்கிறது. ஆனால், கடைசி நேரத்தில் இலங்கைக்கு ஆதரவான நிலையையே இந்தியா எடுக்கும்.

235 total views, 1 views today