அமெரிக்காவின் காலில் வீழ்கிறது சிறிலங்கா

March 4, 2013 Comments Off on அமெரிக்காவின் காலில் வீழ்கிறது சிறிலங்கா
அமெரிக்காவின் காலில் வீழ்கிறது சிறிலங்கா

ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் அமெரிக்கா கொண்டு வரவுள்ள தீர்மானம் தொடர்பாக சிறிலங்கா அரசாங்கம் தனது நிலைப்பாட்டை அடியோடு மாற்றிக் கொண்டுள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இதன்படி, ஜெனிவாவில் அமெரிக்கா கொண்டு வரவுள்ள தீர்மானத்தை எதிர்ப்பதில்லை என்ற முடிவுக்கு சிறிலங்கா வந்துள்ளதாக அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை எதிர்க்கப் போவதாக சிறிலங்கா பிரதிநிதி ஜெனிவாவில் அறிவித்திருந்தார்.

நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறலுக்கு அமெரிக்கா உள்நாட்டுப் பொறிமுறை மூலம் தீர்வு காண வலியுறுத்தி வரும் நிலையில், அமெரிக்காவுடன் இணங்கிப்போக சிறிலங்கா முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

சிறிலங்காவுக்கு எதிரான இறுதியான நிலைப்பாட்டை மேற்குலகம் எடுப்பதற்கு முன்னர், அமெரிக்காவுடன் இணக்கப்பாட்டை ஏற்படுத்துவதற்காக வொசிங்டனுக்கு தூதுவர் ஒருவரை இன்று சிறிலங்கா அனுப்பவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன்மூலம், அமெரிக்காவுக்கு தாம் சவால் விடுக்கவில்லை என்றும், தீர்மானத்தை எதிர்க்கும் அணுகுமுறையை கைவிடுவதாகவும், சிறிலங்கா தகவல் அனுப்பவுள்ளதாக கூறப்படுகிறது.

சிறிலங்கா தூதுவர், அமெரிக்காவுடன் இணைந்து இருதரப்பு நிலைகளுக்கும் பாதிப்பு ஏற்படுத்தாத வகையில், ஜெனிவாவில் கொண்டு வரவுள்ள தீர்மானத்தின் கடினத்தன்மையை குறைக்கும் பணியில் ஈடுபடுவர் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

266 total views, 1 views today