அழகிய அபிவிருத்தியின் பெறுபேறே 9 இலட்சம் கோடி ரூபா கடன் – ஜனாதிபதி

January 9, 2017 Comments Off on அழகிய அபிவிருத்தியின் பெறுபேறே 9 இலட்சம் கோடி ரூபா கடன் – ஜனாதிபதி
அழகிய அபிவிருத்தியின் பெறுபேறே 9 இலட்சம் கோடி ரூபா கடன் – ஜனாதிபதி

புதிய அரசாங்கத்தை அமைப்பதற்காக அன்றி, இருக்கும் அரசாங்கத்துடன் இணைந்து நாட்டைக் கட்டியெழுப்ப அர்ப்பணிப்புடன் செயற்படுவது அனைவரினதும் பொறுப்பாகுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

வறுமையிலிருந்து நாட்டை விடுவிப்பதற்காக அரசாங்கம் எடுத்துள்ள பாரிய செயற்திட்டங்களுடன் இணைந்து காலத்தின் தேவையை நிறைவேற்றுமாறு அனைவருக்கும் அழைப்பு விடுப்பதாகவும் அவர், நேற்று கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற “பேண்தகு யுகம் – மூன்றாண்டு உதயம்” நிகழ்வில் உரையாற்றும் போது இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து உரையபாற்றிய ஜனாதிபதி, “2017ஆம் ஆண்டில் நாட்டை வறுமையிலிருந்து விடுவிக்கும் பிரதான செயற்திட்டமாக கிராம சக்தி தேசிய இயக்கம் இந்த மாதத்திலிருந்து ஆரம்பிக்கப்படும், கமத்தொழில் மற்றும் நீர்ப்பாசன துறைகளில் விரிவான மாற்றத்தை ஏற்படுத்துவதுடன், பல புதிய செயற்திட்டங்களும் அறிமுகப்படுத்தப்படும்.

கடந்தகால அரசாங்கத்தையும் தற்போதய அரசாங்கத்தையும் ஒப்பிட்டு சிலர் அபிவிருத்தி செயற்பாடுகள் தொடர்பான வேறுபாடுகள் தொடர்பில் குற்றம் சாட்டிய போதிலிலும் அன்று கண்ட அழகிய அபிவிருத்தியின் பெறுபேறாக ஒன்பது இலட்சம் கோடி ரூபா கடன் சுமை நாட்டுக்கு ஏற்பட்டுள்ளது. இனிமேலும அந்த போலி உலகம் எமக்கு தேவையா அல்லது தேசிய பொருளாதாரத்தின் உண்மை நிலையைப் புரிந்து கொண்டு நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு அனைவரும் இணைந்து கொள்வதா என்பதனை மக்கள் புரிந்து கொள்ளவேண்டும்.

நன்மை கருதி தீர்மானங்கள் எடுக்கப்படும் அனைத்து சந்தர்ப்பங்களிலும் எதிர்கால அதிகார கனவுடன் அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு ஒருபோதும் இடமளிக்கப்படமாட்டாது. நல்லாட்சி அரசாங்கம் நல்லாட்சி கொள்கைகளை மதித்து பலமான அரசாங்கமாக முன்னோக்கி செல்லும். பொருளாதார ரீதியில் சுபீட்சம் மிக்க நாட்டை கட்டியெழுப்புவதற்கு தற்போதைய அரசாங்கத்துக்கு ஆற்றல் இருக்கின்றது.“ எனக் குறிப்பிட்டுள்ளார்.

சௌபாக்கியமான நாட்டை உருவாக்குவதற்காக அடுத்துவரும் மூன்றாண்டுகளில் அரசாங்கத்தின் அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் பேண்தகு அபிவிருத்தி இலக்கை அடைவதற்கான செயற்திட்டங்களை அமுல்படுத்தி ஜனாதிபதியின் எண்ணக்கருவிற்கமைய “பேண்தகு யுகம் – மூன்றாண்டு உதயம்” தேசிய நிகழ்ச்சித்திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.

“அனைவருக்கும் சௌபாக்கியம்” எனும் தலைப்பில் இந்தியாவின் ஆந்திர மாநில முதலமைச்சர் ஸ்ரீ சந்திரபாபு நாயுடு இந்த நிகழ்வில் சிறப்புரை ஆற்றினார்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள், வெளிநாட்டு துதுவர்கள் மற்றும் பிரதிநிதிகள், உள்நாட்டு வெளிநாட்டு பிரமுகர்கள் உட்பட பெருமளவானோர் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

விழாவோடு இணைந்ததாக ஏற்பாடு செய்யப்பட்ட கருத்தோவிய கண்காட்சியையும் ஜனாதிபதி உட்பட்டோர் பார்வையிட்டதுடன், 2017 ஆண்டை வறுமையிலிருந்து விடுவிக்கும் ஆண்டாக பிரகடனப்படுத்துவதடன் இணைந்ததாக கிராம சக்தி செயற்திட்டத்தை நாட்டுக்கு அர்ப்பணித்தல் மற்றும் இணையத்தள ஆரம்ப நிகழ்வும் ஜனாதிபதியினால் மேற்கொள்ளப்பட்டது.
maithripala-srisena

198 total views, 1 views today