நல்லிணக்க செயலணியின் பரிந்துரைகளை அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டும்

January 11, 2017 Comments Off on நல்லிணக்க செயலணியின் பரிந்துரைகளை அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டும்
நல்லிணக்க செயலணியின் பரிந்துரைகளை அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டும்

நல்லிணக்க பொறிமுறைகள் பற்றிய கலந்தாலோசனை செயலணியின் அறிக்கையின் பரிந்துரைகளை ஸ்ரீலங்கா அரசாங்கம் முழுமையாக அமுல்படுத்த வேண்டும் என சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது.

உண்மை மற்றும் நியாயம் தொடர்பான ஸ்ரீலங்கா மக்களின் அபிலாஷைகள் குறித்து பரந்த அளவில் மேற்கொள்ளப்பட்ட முதலாவது கருத்துக் கணிப்பாகவே இது அமைந்துள்ளதாக கண்காணிப்பகம் கூறியுள்ளது.

நல்லிணக்க பொறிமுறைகள் பற்றிய கலந்தாலோசனை செயலணியின் முக்கிய பரிந்துரைகளில், சர்வதேச மற்றும் உள்நாட்டு நீதிபதிகளையும் ஏனைய அதிகாரிகளையும் உள்ளடக்கிய கால எல்லையற்ற யுத்தக் குற்ற நீதிமன்றத்தை உருவாக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளதையும் சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் சுட்டிக்காட்டியுள்ளது.

நாடாவிய ரீதியான காணாமல் போதல், நிதி மற்றும் அர்த்தமுள்ள நட்டஈடு, அரசியலமைப்பு மற்றும் அரசியல் தீர்வு, நீண்டகால சர்ச்சைகளுக்குள்ளான காணி பிரச்சினைகளுக்கு தீர்வு மற்றும் உளவியல் சமூக தேவைகள் குறித்தும் நல்லிணக்க செயலணி பரிந்துரை செய்துள்ளது.

நல்லிணக்க செயலணியின் அறிக்கை குறிப்பிடத்தக்க அளவில் காத்திரமாக உள்ளதாகவும் நிலைமாறு நீதிப் பொறிமுறை தொடர்பில் அனைத்து சமூகத்தினரும் வெளியிட்ட கரிசனைகள் மற்றும் தேவைகள் குறித்து தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசியாவிற்கான பணிப்பாளர் பிரட் அடம்ஸ் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவைக்கு உறுதி அளித்த வாறு, குறித்த பரிந்துரைகள் தற்போது அரசாங்கத்தின் உடையதாக மாறியுள்ளதாகவும் அவற்றை அமுல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்க வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நல்லிணக்க பொறிமுறைகள் தொடர்பான கலந்தாலோசனை செயலணி கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் உருவாக்கப்பட்டதுடன், மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திலுள்ள பொறிமுறைகளின் முன்மொழிவுகள் குறித்த கருத்துக்களை பெறும் நடவடிக்கையை கடந்த ஏப்ரல் மாதம் ஆரம்பித்திருந்தது.

சிவில் சமூகத்தின் பங்களிப்புடன் நடத்தப்பட்ட செயலணியின் அமர்வுகளில் 7 ஆயிரத்து 306 பேரிடம் இருந்து கருத்துக்கள் பெற்றப்பட்டிருந்தன.

ஆயிரக்கணக்கான வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள், நீதிக்கு புறம்பான கொலைகள், சித்திரவதை, அரச மற்றும் விடுதலை புலிகளால் மேற்கொள்ளப்பட்ட பாலியல் வன்முறைகள், குறித்து நம்பகமான ஆதாரங்கள் உள்ள போதிலும் அது தொடர்பில் நடவடிக்கை எடுப்பதை அரசாங்கம் தவிர்த்திருந்த்தாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனினும் 2015 ஆம் ஆண்டு பதவியேற்ற ஸ்ரீலங்காவின் புதிய அரசாங்கம் இந்த விடயங்கள் குறித்து நடவடிக்கை எடுப்பதில் உள்நாட்டு மற்றும் சர்வதேச ரீதியில் இணக்கமான அணுகுமுறையை பின்பற்றிவருகின்றது எனவும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் கூறியுள்ளது.

இந்த நிலையில் கடந்த 2015 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் முன்னேற்றங்கள் குறித்து மார்ச் மாதம் ஸ்ரீலங்கா அறிக்கையொன்றை சமர்ப்பிக்கவுள்ளது.

எவ்வாறாயினும் தேசிய அரசாங்கத்தின் மூத்த அமைச்சர்களான நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச மற்றும் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன ஆகியோர் விசேட நீதிமன்றத்தில் சர்வதேச நீதிபதிகளின் உள்ளடக்கம் தொடர்பான பரிந்துரையை உடன்படியாக நிராகரித்திருந்தனர் எனவும் சர்வதேச கண்காணிப்பகம் கூறியுள்ளது.

அத்துடன் வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்குவதற்கும் யுத்த வெற்றிவீர்ர்களை வழக்கு விசாரணைக்கு உட்படுவதற்கும் ஜனாதிபதி எதிர்ப்பு வெளியிட்டுள்ளதாக இராஜாங்க நிதி அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன கூறியிருந்தார்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் செய்த் ராத் அல் ஹுசைனும் வெளிநாட்டு நீதிபதிகளின் உள்ளடக்க கூடாது என்ற விடயத்தை ஏற்றுக்கொண்டதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறியிருந்த போதிலும், அதனை ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் உடனடியாக மறுத்திருந்தார்.

நிலைமாறு நீதிப் பொறிமுறை குறித்து பரந்த அளவான கலந்துரையாடலை மேற்கொள்ளும் பொருட்டு, பல்லினங்களை கொண்ட செயலிணியை உருவாக்குவதற்கு ஸ்ரீலங்கா அரசாங்கம் இணக்கியதாக மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசிய பிராந்திய பணிப்பாளர் கூறியுள்ளார்.

நாடாவிய ரீதியில் குறித்த செயலணி மக்களின் கருத்துக்களை கேட்டறிந்துள்ளதாகவும் அந்த செயலணியின் முக்கிய பரிந்துரைகளை தவிர்ப்பதற்கு அரசாங்கத்தால் முடியாது எனவும் பிரட் அடம்ஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.

மனித உரிமைகள் பேரவைக்கு வழங்கிய வாக்குறுதி, மாத்திரமல்லாமல் கொடூரமான யுத்தத்தின் பின்னர் நல்லிணக்கம் மற்றும் நீதியை எதிர்பார்க்கும் சொந்த மக்களினது கரிசனைகளை அரசாங்கம் கட்டாயம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.ca

155 total views, 1 views today