நடராஜா ரவிராஜ் படுகொலை தீர்ப்பிற்கு எதிராக சட்டமா அதிபர் மேன்முறையீடு

January 11, 2017 Comments Off on நடராஜா ரவிராஜ் படுகொலை தீர்ப்பிற்கு எதிராக சட்டமா அதிபர் மேன்முறையீடு
நடராஜா ரவிராஜ் படுகொலை தீர்ப்பிற்கு எதிராக சட்டமா அதிபர் மேன்முறையீடு

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் படுகொலை வழக்கின் கொழும்பு மேல் நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு எதிராக சட்டமா அதிபரினால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான நடராஜா ரவிராஜ், கடந்த 2006 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 10 ஆம் திகதி கொழும்பு நாரஹேன்பிட்டியில் வைத்து சுட்டுக்கொலை செய்யப்பட்டிருந்தார்.

இந்தப் படுகொலை தொடர்பான வழக்கு விசாரணை விசேட ஜுரிகள் சபைக்கு முன்பாக நடைபெற்று வந்த நிலையில், வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த ஐந்து பேரையும் கொழும்பு மேல் நீதிமன்றம் கடந்த டிசம்பர் மாதம் 24 ஆம் திகதி விடுதலை செய்தது.

ஒருமாத காலமாக நடைபெற்றுவந்த இந்த வழக்கில், ஜுரிகளின் ஏகமனதான முடிவின்படி, குற்றஞ்சாட்டப்பட்ட அனைவரையும் மேல் நீதிமன்ற நீதிபதி மணிலால் வைத்தியதிலக குற்றமற்றவர்கள் என விடுதலை செய்தார்.

இந்த நிலையில் வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பினை எதிர்த்து இன்றைய தினம் சட்ட மாஅதிபர் வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.

இதேவேளை, நடராஜா ரவிராஜின் படுகொலை வழக்கில் ஜுரிகள் சபையினால் வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேற்றைய தினம் மேன்முறையீடு செய்திருந்தது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் இந்த மேன்முறையீட்டு மனுவை தாக்கல் செய்திருந்தார்.

எவ்வாறெனினும், நடராஜா ரவிராஜின் படுகொலை வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பில் தனக்கு திருப்தி ஏற்படவில்லை என்பதை ஸ்ரீலங்கா அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான ராஜித சேனாரத்னவும் அண்மையில் நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போது தெரிவித்திருந்தார்.

அதேவேளை, இந்த வழக்கு விசாரணையின் போது முன்னாள் பிரதியமைச்சரான கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் மற்றும் ஸ்ரீலங்கா பாதுகாப்பு பிரிவு ஆகியோர் மீதும் பாரதூரமான சாட்சிகள் முன்வைக்கப்பட்டிந்தமை குறிப்பிடத்தக்கது.

392 total views, 1 views today