‘என்னது 500 ரூபாய் செல்லாதா?’ – லேட்டாக அதிர்ச்சியான கேரளா பாட்டி!

January 11, 2017 Comments Off on ‘என்னது 500 ரூபாய் செல்லாதா?’ – லேட்டாக அதிர்ச்சியான கேரளா பாட்டி!
‘என்னது 500 ரூபாய் செல்லாதா?’ – லேட்டாக அதிர்ச்சியான கேரளா பாட்டி!

பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் இனி செல்லாது; அவற்றுக்குப் பதிலாக புதிய 500 மற்றும் 2,000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் விடப்படும்” என பிரதமர் மோடி கடந்த நவம்பர் மாதம் 8-ம் தேதி அறிவித்தார். மக்களிடம் இருக்கும் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ள கடந்த டிசம்பர் 31-ம் தேதி வரை காலக்கெடுவும் விதிக்கப்பட்டது.

சாமான்ய மக்கள் அனைவரும் தொடர்ந்து ஏ.டி.எம் மையங்களின் முன்பும், வங்கியிலும் வரிசையில் கால்கடுக்க நின்று தங்களது பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றி, புதிய பணத்தை பெற்றுக் கொண்டார்கள். வங்கி மற்றும் ஏ.டி.எம். மையங்களில் நீண்ட வரிசையில் நின்று, பல காரணங்களால், பலநூறு பேர் உயிரிழக்கவும் நேரிட்டது.

இந்த நிலையில், கேரளாவைச் சேர்ந்த சதி என்கிற பாட்டி பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்கிற தகவலை காலதாமதமாக அறிந்து கொண்டதால் அதிர்ச்சிக்குள்ளாகி இருக்கிறார்.

கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே வரப்புழா என்னும் சிற்றூரில் தனியாக வசித்து வருபவர் 75 வயதான சதி பாட்டி. செவிலியராக பணியாற்றி 20 வருடங்களுக்கு முன்பே ஒய்வு பெற்றவர். பெற்ற மகளும், கணவரும் நீண்ட காலத்துக்கு முன்பே இறந்து விட, அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தனியாக வாழ்ந்து வருகிறார். அந்த வீட்டில் மின்சாரம், தொலைபேசி, தொலைக்காட்சி, ரேடியோ என்று எதுவும் கிடையாது. தனக்கான பொருட்களை வாங்க எப்போதாவதுதான் வீட்டை விட்டு வெளியே வருவார் அவர்.

மற்ற நாட்களில் வீடு எப்போதும் பூட்டியே இருக்கும். அண்மையில் காய்கறி வாங்குவதற்காக கடைக்குச் சென்றவர் பழைய 500 ரூபாய் நோட்டை கடைக்காரரிடம் நீட்டியுள்ளார். அந்த ரூபாய் நோட்டு செல்லாது என்று அவர் கூறியதைக் கேட்டு முதலில் அதிர்ச்சி ஆனவர், ’ஏன் செல்லாது ரூ.500 புதுசாத்தானே இருக்கு, நோட்டு கிழியவும் இல்லையே?’ என்று கேட்டிருக்கிறார். அப்போதுதான் மோடி பழைய 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்ததைப் பற்றிய விவரம் அவருக்குத் தெரிய வந்தது.

இதையடுத்து, வேகமாக தனது ஓய்வூதியத் தொகை வரப்பெறும் சேமிப்புக் கணக்கு இருக்கும் ‘State Bank of Travancore’ வங்கிக் கிளைக்கு, தான் வைத்திருந்த பழைய 500 ரூபாய் நோட்டுகளுடன் சென்றிருக்கிறார் சதி பாட்டி.

ஆனால், அவரது துரதிர்ஷ்டம் மோடி அறிவித்த டிசம்பர் 31 காலக்கேடு அதற்கு முன்பே முடிந்திருந்தது. பை நிறைய பாட்டி வைத்திருந்த பணத்தை வங்கி அதிகாரிகள் மாற்ற முடியாது என்று கூறி விட்டார்கள். இதனால் வங்கி வாசலிலேயே நின்று கூச்சலிட்டுள்ளார் அவர். வங்கி அதிகாரிகள் கூறுகையில், ”எங்கள் வங்கியில்தான், அவரது கணக்கு இருக்கிறது. அவருக்கு யாரும் தகவல் சொல்லவில்லை போல. பாவம். நாங்கள் அவர் கையில் இருக்கும் பணத்தை எண்ணவில்லை. ஆனால் நிச்சயம் 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான பழைய ரூபாய் நோட்டுகள் அந்த பையில் இருந்திருக்கும்” என்றனர்.

சதி பாய்

சதி பாட்டியின் வீட்டுக்கு அக்கம்பக்கம் உள்ள வீடுகளில் வசிப்பவர்கள் கூறுகையில்,”எங்கள் யாரையும் அவர் வீட்டருகில் கூட நிற்க விடமாட்டார். நாங்கள் எதாவது உணவு எடுத்துச் சென்றால் கூட அதை வாங்கிக் கொள்ள மாட்டார். இவ்வளவு வருட காலங்களில் எங்களிடம் இரண்டு மூன்று முறைதான் பேசியிருப்பார். அவருக்கு மோடி அறிவித்தது தெரிந்திருக்கும் என நினைத்தோம். அதனால் எதுவும் அவரிடம் கூறவில்லை. மேலும் அவர் கையில் இவ்வளவு ரூபாய் நோட்டுகளை வைத்திருப்பார் என்றும் எங்களுக்குத் தெரியாது” என்றனர்.

சதி பாட்டி,”நான் இருக்கும் வீட்டில் மின்சாரம் பெரிய அளவில் உபயோகம் கிடையாது. எனக்கு தொலைக்காட்சிப் பெட்டியை இயக்கத் தெரியாது என்பதால், நான் என் வீட்டில் அதை வைத்துக் கொள்ளவில்லை. யாரிடமும் போன் பேசியதும் கிடையாது, செய்தித்தாளும் படிப்பதில்லை. அதனால் எனக்கு ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற தகவல் தெரியாது” என்கிறார்.

அவரின் நிலைமை அறிந்து அந்த ஊர் பஞ்சாயத்து கமிட்டி அவர் ரிசர்வ் வங்கியை நாட உதவி செய்து வருகிறது. ஆனால் யாரையும் எளிதில் நம்பாத சதி பாட்டி அந்த உதவியையும் வேண்டாம் என்று கூறியுள்ளார். கணவர் இறந்த பிறகு தனியாக வசித்து வந்த சதி பாட்டியை ஏமாற்றி அவரிடமிருந்த பணத்தை யாரோ ஒருவர் அபகரித்துக் கொண்டுள்ளார். அந்த சம்பவமே சதி பாட்டி இப்படி ஆனதற்குக் காரணம் என்கின்றனர் மக்கள். ஆனால் பழைய ரூபாய் நோட்டுகளை வைத்திருப்பது சட்டப்படி குற்றம் என்று அறிவித்திருக்கிறாரே மோடி.அதை சதி பாட்டியிடம் யார் எடுத்துச் சொல்வது?sathi_bai

sathi_bai01

318 total views, 1 views today