அரச பஸ்ஸில் ஏற்றிச் சென்ற விடுதலைப் புலிகள் எங்கே….?

March 20, 2017 Comments Off on அரச பஸ்ஸில் ஏற்றிச் சென்ற விடுதலைப் புலிகள் எங்கே….?

விடுதலைப் புலிகளின் முக்கிய பொறுப்பில் இந்த பலரை எனது கணவருடன் சேர்த்து அரச பேருந்தில் ஏற்றிச் சென்றார்கள். அதை நான் கண்டேன், தற்போது அவர்கள் எங்கே? என நிர்வாகத்துறை துணை பொறுப்பாளர் இளஞ்சேரனின் மனைவி கேள்வி எழுப்பியுள்ளார்.

கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டம் இன்று 29ஆம் நாளாக தொடர்கின்றது. குறித்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிர்வாகத்துறை துணை பொறுப்பாளர் இளஞ்சேரனின் மனைவி ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே இதை கூறினார்.

தொடர்ந்து தெரிவிக்கையில்,

“இறுதி யுத்தத்தில் எனது கணவர் இராணுவத்தினரிடம் சரணடைந்தார். அவருடன் பல விடுதலைப்புலிகளின் முக்கிய பொறுப்பாளர்களும் இராணுவத்தினரிடம் குடும்பம் குடும்பமாகவும் சரணடைந்தனர்.

அரசியல்துறை துணை பொறுப்பாளர் தங்கன், யாழ் அரசியல்துறை பொறுப்பாளர் இளம்பருதி, மலரவன், கரிகாலன் உள்ளிட்ட பல முக்கிய உறுப்பினர்கள் இராணுவத்தினரிடம் குடும்பம் குடும்பமாக சரணடைந்தனர். அவர்கள் அரச பேருந்தில் ஏற்றப்பட்டு அழைத்து செல்லப்பட்டதை நான் அவதானித்தேன்.
அனைவரும் பாதர் ஒருவருடன் சரணடைந்தவர்கள், அவர்கள் குறித்து இன்றுவரை எவ்வித தகவல்களும் வெளியிடப்படவில்லை. இராணுவத்தினரிடம் சரணடைந்தவர்கள் வருவார்கள் என நானும் காத்திருக்கின்றேன்.

எனது கணவர் செல்லம்போது ஒரு விடயத்தினை குறிப்பிட்டார். “நான் அவர்களுடன் போகின்றேன். நீரும் பிள்ளைகளும் என்னுடன் வந்தால் அனைவருக்கும் ஏதும் நடந்துவிடும். எம்மை தேட யாரும் இருக்க மாட்டார்கள். அதனால் என்னையும் பிள்ளைகளையும் தனியே செல்லுமாறு குறிப்பிட்டார்”. அதனால் நானும் பிள்ளைகளும் அவருடன் செல்லவில்லை.

அவ்வாறு சென்றிருந்தால் நானும் காணாமல் போயிருப்பேன் என அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மௌனம் காக்கின்றது, இன்று எதிர்க்கட்சி தலைவராக சம்பந்தன் ஐயா இருக்கின்றார் என்றால் அது விடுதலை போராட்டத்தினால்தான்.

ஆனால் அவர் அதனை மறந்து செயற்படுகின்றார். இன்று நாம் கண்ணீரோடு போராடிக்கொண்டு இருக்கின்றோம். எமக்கு ஆறுதல் தெரிவிக்க கூட அவர் முன்வரவில்லை.

இராணுவத்தினர் அண்மையில் அவருக்கு எவ்வாறு பாதுகாப்பு வழங்கினர் என்பது நாம் சொல்லி விளங்கப்படுத்த வேண்டியதில்லை.

அவ்வாறு பலத்த பாதுகாப்புடன் இருந்து கொண்டு அரசுக்கு ஆதரவாக செயற்படுகின்றார்.

சர்வதேசமும் அரசின் கதைக்கு செவி சாய்க்கின்றது. இன்று 2 வருடங்கள் கால அவகாசம் வழங்குவதற்கு எமது தலைமைகளும் தலையசைத்துள்ளனர்.

அவ்வாறு நாம் நல்லாட்சி அரசு என கொண்டு வந்தவர்களும் எமக்கு விரோதமாகவே செயற்படுகின்றனர்.

இராணுவத்தினரிடம் கையளிக்கப்பட்ட எனது கணவர் தொடர்பில் தகவல் வெளியிடப்பட வேண்டும்.

அதே வேளை குறித்த பேருந்தில் அழைத்து செல்லப்பட்டவர்கள் தொடர்பிலும் உண்மை வெளிப்படுத்தப்பட வேண்டும்.

பாதிக்கப்பட்ட கண்ணீருக்கு நீங்கள் பதிலளிக்கும் வரை எமது போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

13,474 total views, 1 views today