குரங்குகளுடன் காட்டில் வாழ்ந்த சிறுமியின் பெற்றோர் நாங்கள்தான்! நடந்தது என்ன….

April 19, 2017 Comments Off on குரங்குகளுடன் காட்டில் வாழ்ந்த சிறுமியின் பெற்றோர் நாங்கள்தான்! நடந்தது என்ன….
குரங்குகளுடன் காட்டில் வாழ்ந்த சிறுமியின் பெற்றோர் நாங்கள்தான்! நடந்தது என்ன….

சில தினங்களுக்கு முன்னம் வெளியான ”காட்டில் குரங்குகளுடன் வாழ்ந்த சிறுமியும் சில மர்மங்களும்!” என்ற தலைப்பிலான செய்தி வாசகர்களுக்கு நினைவிருக்கலாம். வன இலாகா அதிகாரிகளினாலும் காவல்துறையினராலும் காட்டில் குரங்குகளுடன் குரங்காக வாழ்ந்து கொண்டிருந்த அந்தச் சிறுமி பலத்த போராட்டங்களுக்கு மத்தியில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் என்பது அந்தச் செய்தியின் சாராம்சம்.

தற்போது அந்தச் சிறுமியின் பெற்றோர் நாமே என்று ரம்சான் அலி ஷா என்பவரும் அவரது மனைவியான நஸ்மா என்பவரும் முன்வந்து உரிமை கோரியிருக்கிறார்கள்.

இதுபற்றி மேலும் தெரிய வருவதாவது:

இந்தியாவின் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதான ரம்சான் அலி ஷா என்பவரும் அவரது மனைவியான 35 வயதுடைய நஸ்மா என்பவரும் ஜாகுங்பூர் பிரதேசத்தின் உள்ளூர்ப் பத்திரிகையொன்று படத்துடன் பிரசுரித்திருந்த அந்தக் குரங்குகளுடன் வாழ்ந்த சிறுமியைப் பற்றிய செய்தியைப் பார்த்துவிட்டு, உடனே சிறுமி தங்க வைக்கப்பட்டிருந்த சிறுவர் நல காப்பகத்துக்குச் சென்றிருக்கிறார்கள். அங்கு இருந்த குறிப்பிட்ட சிறுமி தங்களது பிள்ளைதான் என்று அவர்கள் கண்டுபிடித்துள்ளனர். அதற்கான ஆதாரமாகத் தாங்கள் கையோடு கொண்டு சென்றிருந்த புகைப்படங்களையும் காண்பித்துள்ளனர்.

”கடந்த வருடம் நாங்கள் கடைத்தெருவுக்கு எங்கள் குழந்தைகளுடன் பொருட்கள் வாங்கச் சென்றிருந்தோம். அந்த நேரத்தில்தான் எங்களின் அந்தப் பெண் பிள்ளையைத் தவறவிட்டோம். இது சம்பந்தமாக நாங்கள் போலீசில் முறைப்பாடு செய்தோம். மேலும் பிரசுரங்கள் அச்சடித்து விநியோகித்தோம். சுவரொட்டிகளும் ஒட்டினோம். ஆனால், எந்தப் பலனும் எங்களுக்குக் கிடைக்கவில்லை. எனவே நாங்கள் எங்கள் மகள் இறந்து விட்டிருக்கலாமென்று முடிவு செய்து கொண்டோம்!” என்று அவர்கள் கண்ணீருடன் தெரிவித்துள்ளனர்.

இதுபற்றி தந்தையான ரம்சான் மேலும் இவ்வாறு சொல்கிறார்.

”எங்கள் மகளின் பெயர் அலிஷா. கொஞ்சம் மனநலம் குன்றியவள். கடைத்தெருவில் நாங்கள் பரபரப்பாகப் பொருட்கள் வாங்கிய அந்தச் சிறிது நேரத்திற்குள் அவளைக் காணவில்லை. நாங்கள் எங்கெங்கெல்லாமோ தேடிக் களைத்துப் போனோம்.

எங்கள் மகள் கிடைப்பாளா என்ற ஏக்கத்தில் நான் தினமும் காவல் நிலையம் செல்வேன். ஆனால் அங்கு யாரும் எனக்கு உதவவில்லை. மாறாக என்னிடமிருந்து இலஞ்சமாகப் பணம் கேட்டு வாங்கிக் கொள்வார்கள். கூலிவேலை செய்து நாளொன்றுக்கு 150 ரூபா மட்டுமே சம்பாதிக்கும் நான் எவ்வாறு பெரும்தொகைப் பணம் இலஞ்சமாகக் கொடுக்க முடியும்?

கடைசியில் நாங்கள் நம்பிக்கையிழந்து விட்டோம்.எனது மனைவி பல வாரங்களாக உண்ணவோ, உறங்கவோ இல்லை. தினமும் அழுது கொண்டேயிருந்தார். நாங்கள் வெறும் நடைப்பிணங்களாகவே வாழ்ந்து கொண்டிருந்தோம். மேலும் எனது மகளுக்கு எட்டு வயது என்று ஊடகங்கள் கூறியுள்ளன. அது தவறு. அவளுக்கு இப்போது பத்து வயது.

சிறுவர் காப்பகத்தில் எனது மகளைப் பார்த்த போது நான் வாய்விட்டு அழுதேன். என் மகளும் என்னைப் பார்த்து உறுமினாள். கிட்டத்தட்ட இரண்டு மணித்தியாலங்கள் என் முகம் பார்த்தபடி உறுமிக் கொண்டேயிருந்தாள். என் மகள் அப்படித்தான். அவள் அவ்வாறுதான் செய்வாள்!”

குறித்த சிறுமி தற்போது லக்னோவிலுள்ள நிர்வாண் சிறுவர் காப்பகத்தில் வைத்துப் பராமரிக்கப்படுகிறாள். சிறிது சிறிதாகக் குணமடைந்து வருகிறாள். எனினும் அவளது டி.என்.ஏ. பரிசோதனையின் முடிவுகள் வெளிவந்து ரம்சானும் நஸ்மாவும் சிறுமியின் உண்மையான பெற்றோர் என்று உறுதியான பின்னர்தான் அவளை அவர்களிடம் ஒப்படைக்க முடியுமென அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

83,110 total views, 2 views today