பிரதேச சபை உறுப்பினருக்கு சொந்தமான மீன்பிடிப்படகு ,வலைகள் என்பன தீ வைப்பு

Report
2Shares

மட்டக்களப்பு - கோரளைப்பற்று வடக்குப் பிரதேச சபை உறுப்பினருக்கு சொந்தமான கடல் மீன்பிடிப்படகு மற்றும் வலைகள் என்பன அடையாளம் தெரியாத நபர்களால் தீ வைக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் வாகரை, பனிச்சங்கேணி கடற்கரையில் இன்று அதிகாலையில் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

சம்பவத்தில் தீக்கிரையான படகு மற்றும் வலைகள் என்பன கோரளைப்பற்று வடக்குப் பிரதேச சபை உறுப்பினர் கதிர்காமத்தம்பி சந்திரமோகன் என்பவருக்குச் சொந்தமானது என தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், சம்பவம் தொடர்பில் வாகரைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இது தொடர்பில் பிரதேச சபை உறுப்பினர் க.சந்திரமோகன் கருத்து தெரிவிக்கையில்,

இன்று அதிகாலை கடற்கரையில் எனது படகு மற்றும் வலைகள் எரிவதாக கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து நான் அப்பகுதிக்குச் சென்றவேளை எனது படகு, வலைகள் முற்றுமுழுதாக தீக்கிரையாகி இருந்தது.

இதன் பெறுமதி சுமார் 20 இலட்சத்திற்கும் அதிகமாகும். கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் நான் போட்டியிட்டு வட்டாரத்தில் வெற்றி பெற்று தற்போது வாகரைப் பிரதேச சபையின் உறுப்பினராக இருக்கின்றேன்.

கோரளைப்பற்று, வடக்குப் பிரதேச சபையில் முதல் நாள் அமர்வில் தவிசாளர் தெரிவிற்காக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினருக்கு ஆதரவு தரும்படி என்னிடம் கோரினார்கள். அவர்கள் தவிசாளராகவும், முஸ்லிம் உறுப்பினர் ஒருவரை பிரதித் தவிசாளராகவும் நியமிப்பதற்கு இருந்தனர்.

அது எனக்குப் பிடிக்கவில்லை. எனது தலைமையின் கட்டளையின் பிரகாரம் நான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு எனது ஆதரவை வழங்கினேன்.

அதன் பிற்பாடு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினரால் பல்வேறு விதத்தில் அச்சுறுத்தப்பட்டேன். அதன் விளைவாக இந்தச் சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என நான் சந்தேகப்படுகின்றேன்.

இது தொடர்பில் வாகரைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளேன். இது தொடர்பான குற்றவாளியைக் கண்டுபிடித்து அவர்களுக்கு தண்டனை வழங்குவதோடு, எனது எரியுண்ட படகு மற்றும் வலைகளுக்கான நட்டஈட்டையும் பெற்றுத் தர வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் மற்றும் கிழக்கு மாகாண முன்னாள் விவசாய அமைச்சர் கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர்.

மேலும், குறித்த பிரதேச சபை உறுப்பினரை, கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சரான பிள்ளையான் எனப்படுகின்ற சிவநேசத்துரை சந்திரகாந்தனின் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி தமக்கு வாக்களிக்குமாறு கடும் அழுத்தங்களைக் கொடுத்திருந்தனர்.

எனினும், அதனை பொருட்படுத்தாது, அவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோரளைப்பற்று தவிசாளருக்கு தனது ஆதரவினை வழங்கியிருந்தார்.

அதன் பிறகு பல்வேறு அச்சுறுத்தல்கள் அவருக்கு விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பிள்ளையானின் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியில் பிள்ளையானுக்கு அடுத்தப்படியாக தலைமைப்பதவியில் இருக்கக்கூடிய ஜெயம் என்பவரது நேரடி கண்காணிப்பில், வழிநடத்தலில் குறித்த பிரதேச சபை உறுப்பினரின் உடமைகள் தீக்கிரையாக்கப்பட்டு நாசம் செய்யப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் குறிப்பிடுகின்றனர்.

129 total views